உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 10 மற்றும் 11–ந்தேதிகளில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மாநில அரசும், மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் மறுத்தது. இதுதொடர்பாக விசாரணை, கைது தொடர்கிறது.
மீண்டும் ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் மட்டும் மருத்துவமனையில் 61 உயிரிழப்புகள் பதிவாகியது. ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய்கள் கடுமையான மூளை வீக்கம், காய்ச்சலை ஏற்படுத்தும், இதன்காரணமாகவே உயிரிழப்பு நேரிட்டு உள்ளது என கூறப்பட்டது. கனமழை, வெள்ளம் மற்றும் நேர் தேங்குதல் காரணமாக என்சிபாலிட்டிஸ் தாக்கம் பரவும் எனவும் உள்ளூர் மருத்துவர்கள் எச்சரித்தனர்.
இந்த சோகச்சுவடு மறைவதற்குள் அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியான சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மருத்துவமனையில் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள அதிகாரி டாக்டர் பி.கே. சிங் பேசுகையில் நேற்று 9 குழந்தைகளும், இன்று 15 குழந்தைகளும் உயிரிழந்தன என குறிப்பிட்டு உள்ளார். இவ்வருடம் மட்டும் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது 1,341 ஆக உயர்ந்து உள்ளது. மருத்துவமனையில் மருத்துவ வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 புதிய வெப்பமூட்டும் கருவிகளும் மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.
கூடுதல் மருத்துவர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-dailythanthi.com