சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 5 ம் தேதி, சென்னையில் உள்ள அஇஅதிமுக தலைமை கழகத்தில் கூட்டிய கட்சியின் எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் 109 பேர் கலந்து கொண்டனர். 234 எம்எல்ஏ க்களை கொண்ட சட்டசபையில் அஇஅதிமுக வின் எண்ணிக்கை முதலில் 135 ஆக இருந்தது. இதில் மறைந்த ஜெயலலிதா மற்றும் சபாநாயகர் பி.தனபாலை நீக்கி விட்டு பார்த்தால் எண்ணிக்கை 133. இதில் நடிகர் கருணாஸ், தமீம் முன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகிய மூவரும் தங்களுடைய தனி கட்சிகளில் இருந்து வந்தாலும், அவர்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர். ஆகவே அவர்களையும் அஇஅதிமுக வின் கொறடா உத்திரவு கட்டுப்படுத்தும். இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம்.
எடப்பாடி பழனிசாமி தன்னுடையை பெரும்பான்மையை கடந்த பிப்ரவரியில் நிருபித்த போது அவருக்கு ஓட்டு போட்டவர்கள் 122 அஇஅதிமுக எம்எல்ஏ க்கள். ஆனால் நேற்று நடைபெற்ற கட்சியின் எம்எல்ஏ க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 109 என்கிறார்கள் பெயர் கூற மறுக்கும் இரண்டு அமைச்சர்கள். ஆனால் நிதியமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 111 என்கிறார். வேறு சிலர் தொலைபேசியில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறுகிறார். ஆகவே ஒன்று நிச்சயமாகத் தெறிகிறது. எடப்பாடி யை ஆதரிக்கும் எம்எல்ஏ க்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை 118 ஆக இருந்தால்தான் அது மெஜாரிட்டி அரசாக கருதப்படும். இல்லை யென்றால் அது மைனாரிட்டி அரசாகவே எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே செப்டம்பர் 5 ம் தேதி கூட்டப் பட்ட எடப்பாடிக்கு ஆதரவான எம்எல்ஏ க்களின் எண்ணிக்கை, தமிழ் நாட்டை தற்போது ஆளுவது ஒரு ”’மைனாரிட்டி அரசுதான்”’ என்ற கருத்தை எடப்பாடியை துதி பாடுபவர்களின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் மூலமே உறுதிப் படுத்தி விட்டது.
இனி அடுத்து என்ன நடக்கப் போகிறது தமிழ் நாட்டில் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏ க்கள் இருக்கின்றனர். இது இப்போது 21 ஆக உயர்ந்திருக்கிறது என்கிறார் டிடிவி அணியில் உள்ள எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன். சில நாட்களுக்கு முன்பு டிடிவியை ஆதரிக்கும் 19 எம்எல்ஏ க்கள் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து தங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று எழுத்து பூர்வமான கோரிக்கை மூலமும், வாய் வாரத்தைகள் மூலமும் தெரிவித்து விட்டனர்.
ஆனால் வழக்கமாக இது போன்ற தருணங்களில் அரசை எதிர்க்கும் ஆளும் கட்சி எம்எல்ஏ க்கள் வைக்கும் கோரிக்கையான, ”’சட்டசபையை கூட்டி உடனடியாக தன்னுடையை மெஜாரிட்டியை முதலமைச்சர் நிருபிக்க ஆளுநர் உத்திரவிட வேண்டும், அதுவரையில் முதலமைச்சரோ அவரது அமைச்சர்களோ எந்த விதமான முக்கியமான கொள்கை முடிவுகளையும் எடுக்க ஆளுநர் அனுமதிக்க கூடாது”’ போன்ற எந்த கோரிக்கைகளையும் முன் வைக்கவில்லை. இது ஆச்சரியமானது.
ஏனெனில் எத்தனை முறை முதலமைச்சர் மாற்றப் பட்டாலும், ஊழல் வழக்குகளில் நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டு சிறைக்குப் போனாலோ அல்லது மரணமடைந்தலோ அல்லது வேறு சில காரணங்களால் முதலமைச்சர் பதவி விலகினாலோ புதிய முதலமைச்சர் பதவி ஏற்பார். ஆனால் முதலமைச்சர் மட்டும் பதவி ஏற்க மாட்டார், அவருடன் சேர்த்து ஒட்டு மொத்த அமைச்சரவையும் பதவி ஏற்கும், முதலமைச்சர் மாற்றப் படுகிறார் என்றால் அதனது பொருள் ஒட்டு மொத்த அமைச்சரவையும், புதிய முதலமைச்சருடன் சேர்ந்து புதியதாக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அடுத்தது கட்சித் தாவல் பிரச்சனை. டிடிவி ஆதரவு 19 எம்எல்ஏ க்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய பிறகு, அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களது எம்எல்ஏ பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என்று அஇஅதிமுக வின் சட்டமன்ற கொறடா, சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கிறார்.
இதில் வேடிக்கையான மற்றோர் விஷயம், எடப்பாடி கொண்டு வந்த அவரது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான அஇஅதிமுக வின் 10 எம்எல்ஏ க்கள், எடப்பாடிக்கு எதிராகவே வாக்களித்தனர். ஆனால் இந்த நாள் வரையில் கட்சியின் கொறடா உத்திரவை மீறியதற்காக அவர்களது எம்எல்ஏ க்கள் பதவியை பறிக்குமாறு அஇஅதிமுக வின் கொறடாவோ அல்லது எடப்பாடியோ கூட சபாநாயகரிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்பதுதான். சரி.
இனி அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகின்றன என்பதுதான் எல்லோரும் அறிய காத்திருக்கும் நிகழ்வுகளாகும். ஒன்று மட்டும் உறுதி. தமிழகத்தின் இந்த அஇஅதிமுக அரசு தன்னுடைய முழு பதவி காலத்தையும் நிச்சயமாக பூர்த்தி செய்யாது. அதற்கான சாத்தியக் கூறுகள் மிக, மிக குறைவு என்பதுதான் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிந்த விஷயமாகும்.
இன்னும் சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ எடப்பாடி அரசு கவிழும் என்பதுதான் அஇஅதிமுக வில் உள்ள விவரம் அறிந்தவர்களுக்கும் கூட நன்கு தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் கருத்தும், கணிப்பும் கூட அதுதான். அப்படியென்றால் எடப்பாடி அரசு எப்படி கவிழும், அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் தற்போதைக்கு எழுந்திருக்கும் மிக முக்கியமான கேள்வி. முதல் சாத்தியக்கூறு, மத்திய அரசு சட்டமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு முடக்கி வைப்பது, ஆங்கிலத்தில் சொன்னால் under suspended animation.
இந்த காலகட்டத்தில் முதலமைச்சர் முதல் எந்த அமைச்சரும் சுழல் விளக்கு கார்களில் பயணிப்பதிலிருந்து தாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் அமைச்சரவை பணிகளை செய்ய முடியாது. ஆளுநரும், அவருக்கு மத்திய அரசால் நியமிக்கப் படும் ஆலோசகர்களும் அரசின் அன்றாட நடவடிக்கைகளை பார்த்துக் கொள்ளுவார்கள். இரண்டு மாதங்கள் கழித்து நிலைமை சீரடைந்தால் அப்போது சட்டசபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கப் படும்.
புதிய முதலமைச்சர் தலைமையில், புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும். வெறும் முதலமைச்சரை மட்டும் மாற்றி பழைய அமைச்சர்கள் அனைவரையும் அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் நடைமுறை கிடையாது. ஏனெனில் எத்தனை முறை முதலமைச்சர் என்பவர் என்ன காரணங்களினால் பதவியிலிருந்து இறங்கினாலும், புதிய முதலமைச்சருடன் சேர்த்து புதிய அமைச்சரவையும் பதவி ஏற்க வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனம் கூறும் விஷயமாக இருக்கிறது.
இரண்டாவது சாத்தியக் கூறு எடப்பாடி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, சட்டசபையை முடக்கி வைத்து தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவது. ஆனால் இந்த முடிவுக்கு மத்திய அரசு இரண்டு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஒப்புதலை பெற வேண்டும். இல்லையென்றால் பழைய சட்டசபைக்கு உடனே உயிர் வந்து விடும்.
கலைக்கப் பட்டபோது இருந்த அதே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் கூட புதிய பதவி பிரமானத்தின் மூலம் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற தலைமை செயலாளர்களும் கூட இதனைத் தான் நடக்க வாய்ப்பு உள்ள விஷயமாக பார்க்கிறார்கள். ”’சட்டசபையை மட்டும் முடக்கி வைத்து விட்டு, அரசாங்கத்தை பற்றி எதுவும் அறிவிக்காமல் மத்திய அரசால் இருக்க முடியாது. ஏனெனில் சட்டசபை தன்னுடைய அதிகாரத்தை, மக்களிடம் இருந்து, அதாவது தேர்தல்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வாக்குகளில் இருந்து பெறுகிறது.
அமைச்சரவை தன்னுடைய அதிகாரத்தை அந்த சட்டசபையிலிருந்து தான் பெறுகிறது. ஆகவே தங்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வருகிறதோ, அந்த அமைப்பே முடக்கி வைக்கப் படுகிறது என்றால் தானாகவே, automatically, அமைச்சரவை தன்னுடய அத்தனை அதிகாரங்களையும் இழந்து விடுகிறது. ஆகவே ஒரு மாநில அரசை நீங்கள் டிஸ்மிஸ் செய்கிறீர்கள் என்றால், அதனுடன் சேர்த்து சட்டசபையும் முடக்கப் படும். ஆனால் இதற்கும் நீங்கள் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும்”’ என்கிறார் மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன்.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஆளுங் கட்சியிலும் சரி, திமுக விலும் சரி, தற்போது எம்எல்ஏ க்களாக இருப்பவர்கள் எவரும் ஆட்சி இப்போது கவிழுவதை ரசிக்க வில்லை. காரணம் தேர்தலில் வெல்ல தேவைப்படும் ”’பசையான”’ விஷயம் தற்போது இரண்டு கட்சிகளின் பெரும்பாலான எம்எல்ஏ க்களிடம் இல்லை என்பதுதான். ”’உண்மைதான். எங்கள் கட்சியிலேயே 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்கள் இந்தாண்டுக்குள் தேர்தல் வந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்று கூறுகின்றனர். காரணம், தேர்தலில் போட்டியிட தேவைப் படும் அந்த முக்கியமான ”’வைட்டமின் ப”’ தங்களிடம் இப்போதைக்கு இல்லை என்பதுதான்”’ என்கிறார் திமுக வின் முன்னாள் அமைச்சரும், வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கவராக வும் விளங்கும் ஒரு திமுக பிரமுகர்.
இதே நிலைமைதான் அஇஅதிமுக விலும் நிலவுகிறது. திமுக வை விட இந்த அஇஅதிமுக எம்எல்ஏ க்களின் நிலைமை இன்னமும் பரிதாபத்துக்கு உரியது. ”’நான் 10 ”’வைட்டமின் ப”’ வை செலவழித்துத் தான் எம்எல்ஏ வாகியிருக்கிறேன். கூவத்தூரில் வைத்திருந்து கொடுத்த வாக்குறுதிகளில் பாதியளவுக்குக் கூட இன்றைய ஆட்சி மற்றும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல்கள் வந்தால் நாங்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு, அரசியலுக்கு ஒரேடியாக முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் இருந்து போய் விடுவதுதான்”’ என்கிறார் அஇஅதிமுக எம்எல்ஏ ஒருவர். இந்த விஷயத்தில் இது ஒரு முக்கியமான கோணம்தான். எந்த எம்எல்ஏ வும் தேர்தலை விரும்பாத போது ஆட்சி எப்படி கவிழும். ”’இது உண்மைதான். ஆனால் சில நேரங்களில் அரசியலில் நாம் எவ்வளவு தான் விரும்பினாலும், அந்த விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் வருவதை பார்த்திருக்கிறோம்.
அஇஅதிமுக வை பொறுத்து வரையில் இன்றைய நிலைமை என்பது யார் சொல்லுவதையும் யாரும் கேட்பது இல்லை. இது இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஆதரிக்கும் அனைத்து எம்எல்ஏ க்களுக்கும் பொருந்தும். என்னைப் பொறுத்த வரையில் இதுதான் அபாயகரமான போக்கு என்பேன். எவர் பேச்சையும் எவரும் கேட்க வில்லை என்றால் அது முழுக்கவும் பெரியளவிலான சிக்கல்களுக்கு வழி வகுத்து விடும்.
ஏற்கனவே ஸ்தம்பித்து போய் கிடக்கும் தமிழிக அரசின் நிர்வாகத்தை மேலும், மேலும் சிதைக்கும்”’ என்கிறார் தற்போது பொறுப்பில் உள்ள, தமிழகத்தின் மற்றோர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ‘அஇஅதிமுக மற்றும் திமுக, இந்த இரண்டு பெரிய கட்சிகளும் விரும்பா விட்டாலும் கூட குடியரசு தலைவர் ஆட்சி தமிழகத்தில் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளன. ஏனெனில் நிலைமை அந்தளவுக்கு வரம்பு மீறி போய்க் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இதனை Spiraling out of control””” என்பார்கள்.
அதுதான் தற்போதய தமிழகத்தின் நிலைப்பாடு. இதுவரையில் இவர்கள் ஆட்சியில் நீடிப்பது பாஜக தலைமை, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சில நடவடிக்கைகளும், அஇஅதிமுக வின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக மத்திய அரசிடம் இருக்கும் வண்டி, வண்டியிலான ”’வைட்டமின் ப”’ சம்மந்தப் பட்ட விஷயங்களும் தான் என்று மேலும் சொல்கிறார், இரண்டு திராவிட கட்சிகளின் வரலாற்றை நன்கறிந்த இந்த ஐஏஎஸ் அதிகாரி.
இந்த ஸ்திரமற்ற ஆட்சியின் அவலங்களின் விளைவுகள் வரும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு தெரிய வரும்.
இந்தியாவில் அனைத்து துறைகளிலும், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் விரைவான வளர்ச்சியை அடைந்தும், அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அந்த நிலைமை விரைவில் கடந்த காலங்களின் கரிய நிகழ்வுகளாய் மாறிப் போகலாம் …. அந்த நிலைமை பொய்யாய், பழங்கதை யாய் மாறிப் போகலாம்.
இல்லை !இல்லை !! குட்டிச்சுவர் ஆட்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது !!!
இந்த தகர தமிழ் நாட்டில் ஆட்சி ..அரசாங்கம் எல்லாம் தேவை இல்லை ..சட்டசபை அங்கத்தினர்கள் போதையில் காலையில் ஒருவருக்கும் ..மாலையில் ஒருவருக்கும் ஆதரவு ..செம்மறிகளை போல அடைத்து வைத்து ..பயமுறுத்துவது ..ராணி பத்திரிகை ஒரு முறை எழுதியது இந்தியாவில் ஆக கூடிய கை நாட்டுக்கள் தகர தமிழ் நாட்டில் தான் உண்டு என்று ..பேசாமல் இந்த பிரதேசத்தை பிரித்து ஆந்திரா ..கர்நாடகா ..கேரளா மாநிலங்களோடு இணைத்து விடலாம் …அடிமைகளாக இருப்பதில் இந்த செம்மறிகளுக்கு மிகவும் விருப்பம்
தமிழ் நாட்டில் உடன் தேர்தல் நடத்த வேண்டும்.அங்கு நடப்பது மோடியின் ஆட்சி– காரணம் அண்ணா தி மு க அரசியல்வாதிகள் எல்லோருடைய சிண்டும் மோடியின் கையில். தமிழ் நாட்டில் ஆட்சியா நடக்கிறது? துப்பு கெட்ட ஈனங்கள்- தமிழ் நாட்டு ஆட்சியன் இந்திய அதிபர் எல்லோருமே BJP சார்ந்தவர்கள்.
தமிழ் நாட்டை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பா.ஜ.க. அ.தி.மு.க. வாயைத் திறக்க முடியாது. ஒவ்வொரு அரசியல்வாதி மேலும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. இப்போது தேர்தல் வந்தால் தி.மு.க, வெற்றி பெரும். அவர்களாலும் பெரிதாக மாற்றம் வந்துவிடப் போவதில்லை. அவர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச் சாட்டுக்கள். அவர்களும் ப.ஜ.க. வுக்கு ஆமாம் சாமிதான் போட முடியும். வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து ஜெயிப்பவன் என்ன செய்வான் என்பதற்கு தமிழ் நாடு நல்ல உதாரணம்!