டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது.
இந்த போராட்டங்களுக்கு தடை கோரியும் அனிதாவின் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 5-ந் தேதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்.
இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.