தற்போதைய சூழ்நிலையில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் கருத்துக்கணிப்பில் 41 சதவீதம் பேர் ஆதரவு

Stalinசென்னை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்தும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழகம் முழுவதும் 5,874 பேரிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பண்பாட்டு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

சட்டமன்ற தேர்தல் எப்போது வர வாய்ப்பு உள்ளது? என்ற கேள்விக்கு, சட்டசபை கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அறிவிக்கப்படுவதற்கு சாத்தியம் உள்ளதாக 58.8 சதவீதம் பேரும், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது பாராளுமன்ற தேர்தல் உடன் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக 30.2 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் வந்தால் எந்த கட்சி தலைமையில் ஆட்சி அமையும் என்ற கேள்விக்கு, தி.மு.க.வுக்கு 67 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 15.4 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு 10.7 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு, மு.க.ஸ்டாலினுக்கு 41 சதவீதம் பேரும், நடிகர் ரஜினிகாந்துக்கு 21 சதவீதம் பேரும், நடிகர் கமல்ஹாசனுக்கு 13 சதவீதம் பேரும், டி.டி.வி.தினகரனுக்கு 10 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்பதற்கு, தி.மு.க.வுக்கு 54 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 18 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு 3 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 2 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 2 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 1 சதவீதம் பேரும் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரவேண்டுமா? அல்லது கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தவேண்டுமா? என்ற கேள்விக்கு, ஆட்சியை கலைக்கவேண்டும் என்று 68.2 சதவீதம் பேரும், பொதுதேர்தல் நடத்தவேண்டும் என்று 30.5 சதவீதம் பேரும், ஆட்சி தொடரவேண்டும் என்று 0.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், வெற்றி பெறுவார் என்று 13 சதவீதம் பேரும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று 75 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவார் என்று 29 சதவீதம் பேரும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று 61 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கருத்துகள் எத்தகைய வெளிப்பாடு? என்ற கேள்விக்கு, அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு என்று 45 சதவீதம் பேரும், அரசியல் வெறுப்பு என்று 28 சதவீதம் பேரும், அரசியல் ஆர்வம் என்று 20 சதவீதம் பேரும், சுய விளம்பரத்துக்காக 7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

-dailythanthi.com

TAGS: