பாலியல் தாக்குதலுக்காக சிறையிலடைக்கப்பட்ட ஹரியானா சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா செளதா பற்றிய சர்ச்சைகள் அண்மையில் வெடித்துள்ள நிலையில், அந்த அமைப்பில் உள்ள பல ரகசியங்கள் குறித்து செய்திகள் அண்மைகாலமாக ஊடகங்களில் கசிகின்றன.
அங்கிருக்கும் குகை ஒன்று குறித்தும், அந்த அமைப்பின் தலைமையகத்தில் சடலங்கள் கிடைத்திருக்கும் சர்ச்சைகளுடன் சேர்த்து அங்கு ஆள்கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன.
தேரா சச்சா செளதா அமைப்பு இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து மறுத்துவந்திருந்தாலும், வெள்ளியன்று தங்கள் அமைப்பின் நாளிதழ் மூலம் நீண்ட விளக்கங்களை கொடுத்திருக்கிறது.
தேரா சச்சா செளதா அமைப்பின் பிரத்யேக பத்திரிகை, ‘சச் கஹூ’ (உண்மையை சொல்கிறேன்) இல் ‘மனித உறுப்பு கடத்துதல் பற்றிய நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான், ‘தேரா சச்சா அமைப்பு மனித உடல் உறுப்புகளை கடத்துவதாக தவறான செய்திகளை பல ஊடகங்கள் பரப்புகின்றன. இவை அனைத்தும் அடிப்படை ஆதாரங்களற்றவை’.
‘தேரா அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுய விருப்பத்துடன், தங்கள் பிரியத்துக்கு உரியவர்களின் உடலை தானமாக, நன்கொடையாக கொடுப்பவர்கள், இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிதிகளை பின்பற்றி அவை அனுப்பப்படுகின்றன. தேரா செளதா அமைப்பிற்குள் ஒரு சடலத்தை காரணமில்லாமல் கொண்டுவருவது எளிதல்ல’.
‘இதுதொடர்பாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளும் ஆதாரங்களற்றவை. ஷா சத்னாம் சிங் ஜி ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் கண் வங்கி, ரத்த வங்கி, தோல் வங்கி, எலும்பு வங்கி ஆகியவை சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு அனைத்து பணிகளும் வெளிப்படையாக நிர்வகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது’.
ஆதாரம்
அந்த செய்திகளுடன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ‘பிரியமானவர்களின் மரணத்திற்கு பிறகு, அவர்களின் உடலை தேவைப்படுபவர்களின் பயன்பாட்டிற்காக மருத்துவக் கல்லூரிகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. இந்த பொதுநல முயற்சிகள் பற்றிய புகைப்படங்கள் செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் அதற்கான ஆதாரங்கள்’.
‘குகை என்ற பெயரில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்` என்ற தலைப்பில், நாளிதழின் முதல் பக்கத்திலேயே குகை தொடர்பான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘குகை என்பது ஒரு கட்டிடத்தின் பெயர் என்று தேரா சச்சா செளதாவின் தலைவர் தனது அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால் பல ஊடகங்கள், இப்போதும் ரிசார்ட் கல்லறையை அல்லது அதன் ஒரு பாதையை குகை என்று காட்டி கோடிக்கணக்கான பக்தர்களிடம் தவறான தகவல்களை பரப்புகின்றன’.
ரகசிய குகையின் பின்னணி என்ன?
ரகசிய குகையின் பின்னணி பற்றி விளக்கும் தேரா சச்சா அமைப்பின் நாளிதழ், ‘தேராவாஸ் என அழைக்கப்படும் அந்த குகைக்குள் பெரிய புல்வெளி மைதானம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மனிதநேய பணிகள் பற்றி கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், சில செய்தித் ஊடகங்கள் தங்கள் சுயநலத்திற்காக உண்மையை திரித்து கூறுகின்றன’.
‘எக்ஸ்க்ளூசிவ் என்று அவர்கள் குறிப்பிடும் MSG ரிசார்ட்ஸ், வெளிநாட்டவர்களை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலா தளங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை’.
“எம்.எஸ்.ஜி ரிசார்ட் மேனேஜ்மென்ட் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் இதுபற்றிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. ஆசிரமத்தின் நுழைவாயில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ரிசார்ட் உள்ளது”.
‘ஆனால், கோடிக்கணக்கான தேரா சச்சாவின் ஆதரவாளர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ஊடகங்கள் தீங்கிழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன’.
ஒத்துழைப்புக்கு உறுதி
தேரா சச்சா அமைப்பின் தலைமையகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் எதுவும் நடைபெறவில்லை என்று, இதற்கு முன்னதாக தேரா ச்ச்சா செளதா அமைப்பின் தலைவர் விப்ஷய்னா இன்சான் கூறியிருந்தார்.
பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேச மறுத்த அவர், அப்படி எதாவது நடந்திருந்தால், ஆயிரக்கணக்கான மாணவிகள் தேரா அமைப்பின் கல்வி நிறுவனங்களுக்கு எப்படி வருவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தங்கள் இடங்களில் அரசு மேற்கொண்டிருக்கும் தேடுதல் முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை தேரா சச்சா செளதா அமைப்பின் நிர்வாகம் வழங்கும் என்று அவர் உறுதி கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது தங்கள் அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் பற்றியோ, அடுத்த தலைவர் குறித்த எந்த தகவலையும் விப்ஷய்னா இன்சான் கூறவில்லை.
“நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொள்வோம். அடுத்த தலைவர் பற்றிய அறிவிப்பும் அமைப்பின் சார்பில் வெளியிடப்படவில்லை. தற்போதும் ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு படித்துவருகிறார்கள். சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குகிறோம்.”
“தேரா அமைப்பில் தவறுகள் நடந்தால் இவர்கள் இங்கு இருப்பார்களா? எங்கள் அமைப்பின் சொத்து விவரங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறோம். அரசு நிர்வாகம் கோரும் அனைத்து தகவல்களையும் கொடுக்க தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் விப்ஷய்னா இன்சான். -BBC_Tamil