சென்னை: ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்குமாய் தன் வாழ்வினை முற்றுமுழுதாக செலவிட்டு வாழ்ந்து மறைந்த பெருமகனார் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் ஆவார். பரந்து விரிந்து இப்பூமிப்பந்தில் தமிழருக்கென்று ஓர் தேசம் வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையையும், உயரியக் கனவையும் கொண்டு தமிழீழ விடுதலைக்கு ஆதரவாய் குரலெழுப்பிய தலைசிறந்த ஆளுமைகளுள் ஐயா அவர்கள் முதன்மையானவராவார்.
தமிழ் இதழியல் உலகில் அவர் ஆற்றிய பணிகள் யாவும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ‘தினத்தந்தி’ எனும் நாளேட்டினைத் தொடங்கி நாட்டு நடப்புகளையும், சமகால அரசியலையும் பாமரரும் எளிதாக விளங்கும்படி எளிய நடையில் தந்தருளினார். வெள்ளைய ஏகாதியபத்தியம் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எவர்க்கும் அஞ்சாது நெஞ்சுரத்தோடு செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்தார்.
தமிழில் கையெழுத்து
இந்தித் திணிப்புப் போரில் பங்குகொண்டு சிறைப்பட்டார். தமிழில் கையொப்பம் இடுதலையும், கையொப்பத்தின் தலையெழுத்தை தமிழில் இடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழர்களின் தொன்மவிளையாட்டுகளான கபடி, சிலம்பம் போன்றவைகளை அழியவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்கு அதனைக் கடத்துகிற பெரும்பணியினை தனது பேறெனக் கொண்டிருந்தார்.
சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம்
தமிழ்மறை திருக்குறளைப் போற்றி வளர்த்த அவர், ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற தமிழ்மறையின் வாழ்வியல் நெறிக்கிணங்கவே தனது வாழ்வினை வடித்துக்கொண்டு வாழ்ந்து மறைந்தவராவார். அவரது நினைவு நாளிலும், பிறந்த நாளிலும் தமிழக அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் அகற்றம்
எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுவப்பட்டு 30 ஆண்டுகளாக சென்னை, எழும்பூரில் இருந்து வந்த ஐயாவின் சிலை கடந்த மே மாத இறுதியில் நள்ளிரவு நேரத்தில் அகற்றப்பட்டது. போக்குவரத்துக்காக விளக்குகள் பொருத்துகிற பணிகள் நடைபெறவிருப்பதால் அகற்றப்பட்டிருக்கிறது எனவும், பணிகள் யாவும் நிறைவடைந்த பின்னர் ஓரிரு வாரங்களில் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன அழிப்பு
இந்நிலையில், சிலை அகற்றப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் சிலையை மீண்டும் நிறுவுவதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகையினால், இந்நிகழ்வானது தமிழ்ப்பேரினத்தின் கலை அடையாளமான ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றம் போல இதுவும் தமிழர் அடையாள அழிப்பின் தொடர்ச்சிதானோ என்ற ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
உடனே நிறுவுக
அவ்வித ஐயங்கள் யாவற்றிற்கும் இடங்கொடுக்காது ஐயாவின் சிலையை உடனடியாக நிறுவ வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனவே, ஐயாவின் சிலையை அவரது பிறந்த நாளான செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் மீண்டும் அதே இடத்தில் நிறுவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.