ஆம்.. இந்தியாவில் தமிழ்நாடு தனிதான்! ‘நீட்’டமான வரலாறு!

tamilnaduஎந்த மாநிலமும் எதிர்க்காத ’நீட்’ தேர்வினை தமிழ்நாடு மட்டும் தனியாக எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்பது முதல் கேள்வி.  மற்ற கல்விமுறைகளுடன் போட்டியிடும் வகையில் மாநிலக் கல்விமுறை தரமாக உள்ளதா? நீட் தேர்வில் ஒரு  முறை தோற்றாலும் மூன்று முறை எழுத முடியுமே? மருத்துவக் கல்வியைத் தவிர வேறு படிப்பே இல்லையா? உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது சரிதானா? என்று அடுத்தடுத்த கேள்விகளும் பாய்கின்றன. முதல் கேள்விக்கான விடையை விரிவாகத் தேடினால் அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடைகள் அதற்குள்ளேயே கிடைக்கும்.

சமூக நீதியில்-கல்வி முறையில்-சமூக நலத்திட்டங்களில் தமிழகம் எப்போதுமே முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் சுதந்திரத்திற்குப் பிறகும்கூட இம்மூன்றும் சரியாகக் கிடைக்காத நிலை உள்ளது. தமிழகத்திலோ, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வாய்த்த, குறைந்த அதிகாரம் கொண்ட-இரட்டை ஆட்சி முறையில் 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை ஆளும் வாய்ப்பு பெற்ற நீதிக்கட்சி இந்த மூன்று துறையிலும் தனித்துவமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சமூக நீதிக்கான முதல் சட்டம்

பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமான தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டம், கோவில் சொத்துகளை அரசுடைமையாக்கும்  அறநிலையத்துறைச் சட்டம், பெண்களுக்கான வாக்குரிமை எனத் தொடர்ந்த அந்தப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் முக்கியமானதுதான், சமூக நீதியின் ஆணிவேரான வகுப்புவாரி இடஒதுக்கீட்டுச் சட்டம். 1921ஆம் ஆண்டு பனகல் அரசர் ராமராய நிங்கர் ஆட்சியில் இதற்கான முதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. 1928ல் சுப்பராயன் தலைமையிலான நீதிக்கட்சி அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா இந்த வகுப்புவாரி உரிமை ஆணையை முழுமையாக செயல்படுத்தி, அரசுப் பணிகளில் பார்ப்பனர்-பிற சாதியினர்-தாழ்த்தப்பட்டோர்-முஸ்லிம்கள்-ஆங்கிலோ இந்தியர்  உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இடம் பெற வழி வகுத்தார்.

இந்த சமூகநீதிதான் தமிழகத்தில் அனைத்துப் பிரிவு மக்களும் வேலைவாய்ப்பும் கல்வியும் பெறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்து, 1950ல் குடியரசான நிலையிலும் இந்த வகுப்புவாரி உரிமையிலான இடஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் தொடர்ந்து வந்தது. அப்போதுதான் செண்பகம் துரைராசன் என்ற பிராமண சமுதாயத்து மாணவி, நீதிக்கட்சி ஆட்சிக்கால இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால் தனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதே சமூகத்தின் சி.ஆர்.சீனிவாசன் என்பவர் தனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என மனு செய்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம்பெற்றவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் மனுதாரர் சார்பில் வாதாடினார். அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதி மற்றும் 29(2)வது விதி ஆகியவற்றுக்கு எதிராக வகுப்புவாரி உரிமைச் சட்டம் இருக்கிறது என்கிற வாதத்தை ஏற்று, வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காங்கிரஸ் தலைமையிலான சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போதுதான் மாணவி செண்பகம் துரைராசன், மருத்துவக்கல்லூரிக்கே விண்ணப்பிக்காமல் வகுப்புவாரி உரிமையை எதிர்த்து மனு செய்திருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது. எனினும், உச்சநீதிமன்றமும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமைச் சட்டம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.

இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம்

22 ஆண்டுகாலமாக கல்வி-வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில் நடைமுறையிலிருந்த சட்டம் செல்லாது என உச்சநீதிமன்னறம் தீர்ப்பளித்ததால், தமிழகத்தின் சமூக நலன் பாதிக்கப்பட்டது. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமும் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும் தனித்தனியே போராட்டக் களம் கண்டன. இரண்டின் இலக்கும் ஒன்றாகவே இருந்ததால், இரட்டைக் குழல்  துப்பாக்கி என்றார் அண்ணா. திராவிட இயக்கத்தின் போராட்டம்  ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து டெல்லியில் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பெருந்தலைவர் காமராசர்  எடுத்துக் கூறினார். இதனையடுத்து, தமிழகத்தின் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு உரிமை பாதுகாக்கப்படும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் 2.6.1951 அன்று கொண்டு வரப்பட்ட இத்திருத்தம், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15வது விதியின் உட்பிரிவாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, இந்த 15வது விதியில் உள்ள எதுவும்- அல்லது 29(2)ல் கண்ட எதுவும் சமுகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களுக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைசாதி மக்களுக்கும் முன்னேற்றம் அளிக்கக் கருதி, மாகாண (மாநில) அரசாங்கம் தனிச்சலுகை வழங்குவதாகச் செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது என்ற திருத்தம் செய்யப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியல் அமைப்புச் சட்டத்தில், அவசியமான இந்த முதல் திருத்தம் அவர் வாழ்ந்த காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டு, 18.6.1951 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறை செய்யப்பட்டது.

இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் கடைப்பிடிக்கப்படாத சமூகநீதியை தமிழகம் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்ததால், அந்த சட்டத்திற்கு தடையில்லா வகையில், சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உரியது.

தமிழகத்தின் தனித்துவமான சட்டங்கள்

அறிஞர் அண்ணா ஆட்சியில் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட ஏற்பு அளிக்கும் விதத்தில் 18.7.1967ல் இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதுவும் இந்தியாவின் வேறெந்த மாநிலமும் முன்னெடுக்காத முயற்சிதான். தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை எனும் வகையில் இரு மொழி (தாய்மொழி மற்றும் ஆங்கிலம்) கொள்கைக்கான மசோதாவும் அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டம், பெண்களுக்கான சொத்துரிமைச்  சட்டம், மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்கும் சட்டம் என சமூக நலன் சார்ந்த சமூக நீதித் திட்டங்கள் வேறெந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.

அந்த அடிப்படையில்தான், நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமைச் சட்டம் பெருந்தலைவர் காமராசர்-கலைஞர்- எம்.ஜி.ஆர் ஆட்சிகளில்  மெல்ல மெல்ல வளர்ந்து 1989ல் மீண்டும் அமைந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் 69% என்ற நிலையை அடைந்தது. (பிற்படுத்தப்பட்டோர் 30% + மிக பிற்படுத்தப்பட்டோர் 20% + தாழ்த்தப்பட்டோர் 18% + பழங்குடியினர் 1% = 69% என்ற சமூக நீதி கலைஞர் ஆட்சியில் நிலைநாட்டப்பட்டது)

இந்நிலையில்தான், இந்தியா முழுவதும் பிற்படுத்தபட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முடிவை 1990 ஆகஸ்ட் 7ல் பிரதமர் வி.பி.சிங் மேற்கொண்டார். அதற்கெதிராக வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. ராஜீவ்  கோஸ்வாமி என்ற மாணவர் தீக்குளிக்க, அதனை வடஇந்திய ஊடகங்கள் பெரியளவில் முன்னெடுத்து, வி.பி.சிங் தலைமையிலான தேசிய  முன்னணி அரசுக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்கின. அந்த அரசை ஆதரித்த பா.ஜ.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றது.

1990 நவம்பர் 7ந் தேதி வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோதும், பின்னர் அமைந்த அரசுகளால் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை தவிர்க்க முடியவில்லை. 1991ல் அமைந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில்  மத்திய அரசில் முதல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. மண்டல் கமிஷன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து இந்திரா சாய்னி என்பவர் தொடர்ந்த வழக்கில், இடஒதுக்கீட்டின் அளவு 50%க்கு மேல் போகக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு கல்வி-வேலைவாய்பபுகளில் நடைமுறையில் இருந்தது.

இந்தியாவுக்கு 50% தமிழகத்திற்கு 69%

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு உள்ளது என வழக்கறிஞர் விஜயன் வழக்கு போட்டார். சமூகநீதியின் தாய்மடியான தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தி.மு.க. போராட்டத்தை மேற்கொண்டது. கலைஞருடன் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் இணைந்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டமும் அதற்கு மக்களிடம் கிடைத்த ஆதரவும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை அச்சுறுத்தின.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எடுத்த முயற்சிகளால், தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் ஜெயலலிதா. இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி-யின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்தின் 4-ம் பிரிவு கூறும் வழிகாட்டு நெறிகளுக்கேற்ப, மாநில அரசு ஒரு சட்டத்தை உருவாக்கி அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருந்தால் அந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தின் 14வது மற்றும் 19வது அம்சங்களுக்கு முரணாகாது என்ற அடிப்படையில் இந்த மசோதா நிறைவற்றப்பட்டது.

ஆசிரியர் கி.வீரமணி துணை நிற்க, உருவாக்கப்பட்ட இந்த சட்டமசோதா செல்வி.ஜெயலலிதா அரசால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, இந்திய அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டதன் வாயிலாக, கலைஞர் ஆட்சியில் தமிழகம் எய்திய 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. (இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 25 ஆண்டுகளாகியும் இன்னமும் முடியவில்லை. இடைக்கால ஏற்பாடாக 69%ல், உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50%க்கு மேல் உள்ள விழுக்காட்டிற்கான இடங்களுக்கு இணையாகப் பொதுப்பிரிவினருக்கு கூடுதலான இடங்களை ஒதுக்கும் முறை தொடர்ந்துகொண்டிருக்கிறது) இந்தியாவுக்கு 50% இடஒதுக்கீடு என்றால், தமிழகத்திற்கு மட்டும் சட்டத்தின் ஒப்புதலுடன் 69%தான்.

நுழைவுத்  தேர்வுகளிலிருந்து விடுவிப்பு

தமிழகத்தில் மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்விகளுக்கான இடங்கள் அதிகம். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் நுழைவுத் தேர்வு முறை கைவிடப்பட்டது. 2001-2006ல் செல்வி.ஜெயலலிதா ஆட்சியில் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தநிலையில், 2006ல் அமைந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு, உரிய முறையில் நுழைவுத்தேர்வினை ரத்து செய்து அதற்கான சட்டபாதுகாப்பையும் ஏற்படுத்தியது.

இதன்காரணமாக, , +2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில்-வெளிப்படையான கலந்தாய்வின் அடிப்படையில்-இடஒதுக்கீட்டு அளவுகோலின்படி ஒவ்வொரு மாணவரும் தங்களின் மதிப்பெண்களுக்கேற்ப, தங்களுக்கான மருத்துவ-பொறியியல் கல்லூரிகளைத் தாங்களே தேர்வு செய்யும் வாய்ப்பு அமைந்தது. இதுதான் ஜெயலலிதா மரணம் அடையும்வரை நீடித்தது.

மருத்துவத்தில் முதலிடம்

சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள்-கிராமப்புற ஏழை மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் டாக்டராகவும் இன்ஜினியராகவும் முடிந்தது. தரமான உயர் சிகிச்சைகள் பெற தமிழகத்தில்தான் சிறந்த மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பதை தமிழகம் நோக்கி வரும் வெளிமாநில நோயாளிகளின் எண்ணிக்கையே நிரூபித்தது.

தலைநகரம் தொடங்கி குக்கிராமம் வரை அரசாங்க மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், தாய்சேய் நல விடுதிகள், 108 ஆம்புலன்சுகள் என இலவச மருத்துவ சேவையும், உயர் சிகிச்சைக்கான இலவச காப்பீட்டுத்திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும், பிற மாநிலங்களிலிருந்து தனித்துவமாக தன்னை அடையாளப்படுத்திய தமிழகத்தில்தான். அதனால்தான், வேறெந்த மாநிலமும் கவனத்தில்கொள்ளாத நீட் தேர்வின் அபாயத்தை முன்பாகவ உணர்ந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதா நிறைவேற அனைத்துக் கட்சிகளும் துணை நின்றன. ஆனால், அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்க ஒரு துரும்பும் எடுத்துப்போடாத மத்திய அரசினால் இத்தனை காலமாக தமிழக மாணவர்களுக்கு கிடைத்துவந்த எளிதான மருத்துவக் கல்வி  வாய்ப்பு பறிபோயிருக்கிறது.

பறிக்கப்பட்ட  உயிர்

இந்திய அளவிலான பல  நோயாளிகளுக்கெல்லாம் தரமான சிகிச்சை அளித்து உயிர் பிழைக்கச்  செய்த மருத்துவர்கள் நிறைந்த தமிழகத்தில்தான், தன்னுடைய டாக்டர் கனவு நிறைவேறாமல் செய்த, மோடி  தலைமையிலான இந்திய அரசின் நீட் தேர்வு முறையால் உயிரை இழந்திருக்கிறார் அரியலூர் அனிதா.

தமிழகம் மட்டும் ஏன் நீட் தேர்வை எதிர்த்து நின்று விலக்கு கோருகிறது என்கிற கேள்விக்கான வரலாற்றுப்பூர்வமான விடையை விரிவாக அறியும்போது,  மற்ற  அனைத்துக் கேள்விகளும் அவசியமற்றுப் போகின்றன. அவசியமற்ற கேள்விகளால் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது அனிதாவின் உயிர்.

-nakkheeran.in

TAGS: