மதுரை, கன்னியாகுமரி மகா சபா அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா, ஜவகர் நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டும் தான் உள்ளன. ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அனைத்தும் உண்டு உறைவிடப்பள்ளிகள் ஆகும்.
இந்த பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை தான் வகுப்புகள் உள்ளன. இவற்றில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில் பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் 600 இடங்களில் செயல்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை. தமிழ்நாட்டிலும் இந்த பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று நவோதயா வித்யாலயா சமிதி சேர்மனுக்கு மனு அனுப்பினேன். அதற்கு அவர் அனுப்பிய பதிலில், ‘தமிழகத்தில் இந்த பள்ளிகள் கொண்டு வர மாநில அரசு ஒத்துழைக்கவில்லை‘ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தில் மாவட்டந்தோறும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்றது வந்தது.
கடந்த மார்ச் மாதம் விசாரணை நடைபெற்ற போது “இங்கு இருமொழிக்கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பள்ளிகள் மூலம் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை திணிக்க மத்திய அரசு முயன்றது. அதனால் தான் இந்த பள்ளிகளை கொண்டு வர மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை” என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மத்திய, மாநில அரசுக்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. ஜூன் மாதம் விசாரணை நடைபெற்ற போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் போதிய கல்வி வசதிகள் உள்ளன. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை. இது அரசின் கொள்கை முடிவாகும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. பல பள்ளிகளில் போதிய அளவு குழந்தைகள் பயிலாவிட்டாலும் கூடுதல் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை ஐகோர்ட்டு தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட்டு உள்ளது. பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவுவெடுக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசம் அளித்து உள்ளது. நவோதயா பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்கவும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. பள்ளிக்கு 25 ஏக்கர் நிலம் வழங்குவது, தடையில்லா சான்றிதழ் வழங்குவது தொடர்பாக விரைந்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
-dailythanthi.com