பிறமொழிகளுக்கு அதிக மரியாதை கொடுக்க வேண்டும்: ஹிந்தி பேசும் மக்களுக்கு ராம்நாத் அறிவுரை!

ramnathநாட்டில் பேசப்படும் பிற மொழிகளுக்கும் அதிக மரியாதை தர வேண்டும் என ஹிந்தி பேசும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ‛ஹிந்தி திவஸ்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது,

இந்தியாவின் அலுவலக மொழியாக ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகும் சில பகுதிகளில் ஹிந்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. நாட்டில் பேசப்படும் பிற மொழிகளுக்கும் அதிக மரியாதை தர வேண்டும் என்றும் அப்போதுதான் நாடு முழுவதும் ஹிந்தியை பிரபலமடைய செய்ய முடியும் என்றார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், தங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படுவதாக சில மாநில மக்கள் நினைக்கின்றனர். அதனால் ஹிந்தி மொழி பேசும் மக்கள், பிராந்திய மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். தமிழர்களுக்கு வணக்கம் கூறியும், முஸ்லிம்களை ‛அதாப்’ என்றும், தெலுங்கு பேசுபவர்களை ‛காரு’ என்றும் மரியாதையாக அழைக்க வேண்டும்.

இவ்வாறு பிற மொழி பேசும் மக்களிடம் பேசும் போது, அவர்கள் மொழியில் உள்ள சில வார்த்தைகளை அறிந்து, அதை பயன்படுத்த வேண்டும். அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து, மதிப்பளிக்க வேண்டும். பிற மொழி தழுவல்கள், கலாசாரத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாட்டில் ஒற்றுமை ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-nakkheeran.in

TAGS: