அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது யார்? தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரபரப்பு பரிந்துரை

anithaஅரியலூர்: மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டது ஏன்? அவரை தூண்டியது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீட் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நீட்டில் தோல்வியுற்ற அரியலூர் மாணவி அனிதா விரக்தியில் கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால், நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் போராட்டம் நடைபெற்றன. அனிதா மரணம் தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி புதிய சர்ச்சையை கிளப்பினார். அனிதா மரணம் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், அரியலூர் மாணவி அனிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியருக்குத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஆதிதிராவிட நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் அதிகாரிகள் அனிதாவின் குடும்பத்தினரிடமும், குழுமூர் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளனர்.

இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முருகன், அனிதா மரணம் பற்றிய விசாரணையின் கோணத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதாவுக்கு வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக்கலூரியிலும், வி.ஐ.டி கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் படிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அனிதாவும் அதில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்வதற்கு ஆயத்தமாக இருந்துள்ளார்.

இதற்கிடையில், அவர் மனம்மாறி தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? அவருடைய மனதை மாற்றியவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்துமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியரிடமும், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: