புதுடெல்லி, மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 25–ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவிலும் டெல்லி, உத்தரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான ரோஹிங்யாக்கள் குடியேறி உள்ளனர். ஆனால் இவர்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் அவர்களை திருப்பி அனுப்ப அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.
மியான்மரில் இருந்து ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வரிசையாக வங்கதேசம் வரும் நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை தடுத்து நிறுத்த இந்திய ராணுவம் சில்லி மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்துகிறது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
வங்காளதேசம் உடனான எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பை அதிகரித்து உள்ளது. இந்தியாவிற்குள் ரோஹிங்யாக்கள் வருவதை தடுக்க சில்லி மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்த ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ரோஹிங்யாக்களுக்கு எதிராக காயம் ஏற்படுத்தும் வகையிலான உபகரணங்களை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை, அவர்களை கைது செய்யவும் விரும்பவில்லை. ரோஹிங்யாக்கள் எங்கள் மண்ணில் பிரவேசிப்பதை சகித்துக்கொள்ள முடியாது என புதுடெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி கூறிஉள்ளார். இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்யும் நூற்றுக்கணக்கான ரோஹிங்யாக்களை தடுக்க நாங்கள் சில்லி குண்டுகளை பயன்படுத்துகிறோம், நிலையானது பதற்றமாக காணப்படுகிறது என அதிகாரி கூறியதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீடியாவிற்கு பேசுவதற்கு அதிகாரப்பூர்வமான நபர் கிடையாது என்பதால் அதிகாரி அவருடைய அடையாளத்தை தெரிவிக்க விரும்பவில்லை என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
மேற்கு வங்காளத்தில் எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது, எல்லைப் பாதுகாப்பு படையினர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.பி.எஸ். ஜாஸ்வால் பேசுகையில், ரோஹிங்யாக்களை திரும்பி அனுப்ப, படைகள் சில்லி குண்டுகள் மற்றும் ஸ்டன் குண்டுகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மிளகாய் குண்டுகள் தாங்க முடியாத எரிச்சலையும் தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தும்.
இந்தியாவில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்ற உளவுத்துறை எச்சரிக்கையை குறிப்பிட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. ஆனால் எங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் எந்தஒரு தொடர்பும் கிடையாது என ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் டெல்லியில் சிறப்பு படை போலீஸ் அல்-கொய்தா பயங்கரவாதி சவுமன் ஹக்கை கைது செய்தது. விசாரணையில் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போரிட ஆட்சேர்க்கவே பயங்கரவாதி இங்குவந்தது தெரியவந்தது.
டெல்லி போலீஸ் அதிகாரி பேசுகையில் பிரமோத் சிங், மியான்மருக்கு எதிராக ஒரு மத போரை தொடங்க அல்-கொய்தா, இந்தியா மற்றும் வங்காளதேசத்தை தங்களுடைய தளமாக பயன்படுத்த விரும்புகிறது என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. எங்களுடைய தேச பாதுகாப்புக்கு எச்சரிக்கை உள்ளது என்பது தெளிவாகி உள்ளது,” என்றார்.
-dailythanthi.com