ஜெயலலிதா இட்லியும் சாப்பிடல, சட்னியும் சாப்பிடல… நாங்க பொய் சொன்னோம் – திண்டுக்கல் சீனிவாசன்

dindugal-srinivasanமதுரை: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக ஒப்பு கொண்டுள்ளார்.

ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நல குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண மருத்துவமனை வாயிலில் ஏராளமான கூட்டம் கூடியது.

நாளுக்கு நாள் ஜெயலலிதா குறித்த தகவல் அறியாமல் தொண்டர்களும், மக்களும் வேதனை அடைந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா உப்புமா சாப்பிட்டார், இட்லி சாப்பிட்டார் என அமைச்சர்களும், அதிமுக செய்தி தொடர்பாளர்களும் ஊடகங்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

யாரும் அனுமதிக்கப்படவில்லை

ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோ சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவர்களால் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.

நோய் தொற்று

ஜெயலலிதா யாராவது சந்தித்தால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியபடி இருந்தனர். இதனிடையே டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார்.

ஜெ.வை கொன்றுவிட்டனர்

சமீபகாலங்களாக சசிகலா குடும்பத்தினர் மீது ஜெயலலிதா மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் பொது இடங்களில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன்படி ஜெயலலிதாவை கொன்றதே சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் என்று சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரையில் கூட்டம்

இந்நிலையில் மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியது பொய். ஜெயலலிதா இதை சாப்பிட்டார், அதை சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள்.

சந்திக்கவிடவில்லை

ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினரே பார்த்துக் கொண்டனர். அவரை பார்க்க யார் வந்தாலும், மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் அறையில் உட்கார வைத்து ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று சசிகலாவோ அல்லது சசிகலாவின் உறவினர்களோ தெரிவித்து அனுப்பிவிடுவர்.

மாத்திரை தரவில்லை

சாதாரண காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை வழங்காமல் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை யாராவது சந்தித்துவிட்டால் அவர் மெல்ல மெல்ல கொல்லப்படும் சேதியை அவர் பகிரங்கப்படுத்திவிடுவார் என்ற காரணத்தினாலேயே அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை இந்த சசிகலா குடும்பத்தினர்.

வீடியோ வெளியிடுங்கள்

விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்தவுடனே ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ வெளியிடுவோம் என்று சசிகலா குடும்பத்தினர் கூறுகிறார்கள். அந்த வீடியோவை வெளியிடுங்கள். உண்மையை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

tamil.oneindia.com

TAGS: