புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன், ஓஎன்ஜிசிக்கு எதிராக நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் அழிந்து விடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மத்திய-மாநில அரசுகள் செவி சாய்க்காததால் அப்பகுதி மக்கள் 166 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதை கண்டித்து கடந்த 128 நாள்களாக அய்யனார் திடலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவர்களை சமாதானப்படுத்த எந்த அரசும் முன்வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.