“கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம்” அமைச்சர் கே.பாண்டியராஜன் உறுதி

keezhadi-28-1493374362சென்னை, மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 3-ம் கட்ட பணிகள் நிறுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

கீழடி நாகரிகம் நகர்ப்புறம் சார்ந்தது, அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கீழடி அகழாய்வு பணிக்காக ஒரு வருடம் முன்பே தமிழக அரசு சார்பில் நிலம் தரப்பட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் நிலம் தர தயாராகவும் இருந்தது. கீழடியில் கிடைத்த பொருட்களை மைசூருக்கு எடுத்து செல்லக்கூடாது, அதனை தமிழகத்திலேயே வைத்திருக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கிடைத்த பொருட்களின் தொன்மை பண்பினை ஆராய அப்பொருட்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளன. இதற்கு ஒரு வருட காலம் ஆகும்.

கீழடி 3-ம் கட்ட பணிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி வழங்கி, பங்குதாரராக ஆகியுள்ளது. ஏற்கனவே கீழடி அகழாய்வு பணியில் தமிழக அரசை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசின் தொல்லியல் துறை நிறுவனத்துக்கு (ஏ.எஸ்.ஐ.) ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மத்திய- மாநில அரசு கூட்டாக இணைந்து முதன்முறையாக கீழடியில் அகழாய்வு பணியை விரைவில் மேற்கொள்ள உள்ளது.

ஜெயலலிதா முயற்சியின் காரணமாக 1991-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது. இதுவரை 39 அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எந்தவகையிலும் தமிழரின் தொன்மைக்கு, அத்தொன்மையை கண்டறியும் முயற்சிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கீழடி அகழாய்வு பணி நிறுத்தத்துக்கு அதிகாரி மாற்றப்பட்டது தான் காரணம் என்பதை நான் நம்பவில்லை. எந்த ஒரு விஷயத்திலும் உடனடியாக அறிக்கை எதிர்பார்ப்பது தவறு. என்னை பொறுத்தவரை ஏ.எஸ்.ஐ.-ன் அதிகார வரம்புக்கு உட்பட்டு நடக்கும் செயல்பாடுகளில், நோக்கத்துக்கான குவியம் மாறிவிடக்கூடாது என்று தான் வலியுறுத்துவேன். எனவே கீழடியில் கிடைத்த கலைப்பொருட்கள் எந்தவிதத்திலும் அங்கிருந்து செல்லாமல் பார்த்துக்கொள்வோம். பாதுகாப்போம் அப்பொருட்களை பறிபோக விடமாட்டோம். இதில் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.

தமிழகத்தில் 36 அருங்காட்சியகங்கள் உள்ளன. அவற்றை உலகத்தரத்துக்கு கொண்டுவரும் நோக்கில் பணிகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்கு ‘ஆர்ட் கேலரி’ எனும் தேசிய கலை காட்சியம் ரூ.11 கோடி செலவில் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

விரைவிலேயே ‘தமிழ் விர்ச்சுசல் அகாடமி’யுடன் இணைந்து காட்சி படுத்தப்பட்ட கலைப்பொருட்களை ‘ஆன்-லைன்’ வெளிச்சத்துக்கு கொண்டு வர உள்ளோம். இதற்காக பெரிய அளவில் முதலீடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுகுறித்து தெரியப்படுத்துவோம். எந்த பொக்கிஷ பொருளும் நம்மை விட்டு போகக்கூடாது என்ற நோக்கில் தான் சிலை கடத்தல் ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டார். தற்போது நம்மை விட்டு சென்ற பொருட்கள் எல்லாம், நம்மை தேடி வரும் அதிசயம் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: