ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன்

Jayalalithaaமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தது முதல் இன்றுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், அதிமுகவில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்கள் பலரும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கருத்துகளை வெளியிட்டுவந்தனர்.

வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவர் இட்லி சாப்பிட்டார், உடல்நலன் தேறிவருகிறார் என்று தெரிவித்தது பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

சீனிவாசனின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் தினகரன் விசாரணை ஆணையம் அமைத்தால் அதற்கு ஒத்துழைப்பு தர தயார் என்று அறிவித்தார்.

அவர் மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சமயத்தில் எடுக்கப்பட்ட காணொளி கட்சிகள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் விசாரணை கமிஷனுக்கு அவற்றை அளிக்க தயங்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இதன்தொடர்ச்சியாக இன்று(செப் 25) தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்படும் என்றும் அந்த ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க ஆணையம் அமைக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கோரிவந்த திமுக இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது. -BBC_Tamil

TAGS: