புதுடெல்லி, புதுடெல்லியில் இன்று நடந்த குழந்தை மற்றும் வயது வந்தோர் தொழிலாளர் கருத்தரங்கில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, 2022ம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நாட்டில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆபரேசன் ஸ்மைல் திட்டம் உள்துறை அமைச்சகத்தினால் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுநாள் வரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இத்திட்டம் மாநில அரசாங்கங்களின் உதவியுடன் தொடர்ந்து நடந்து வருகிறது.
குழந்தை பருவம் கடவுளின் சிறந்த அன்பளிப்பு ஆகும். ஆனால், குழந்தை தொழிலாளராக சிக்கி கொண்டவர்கள் அந்த அழகிய பரிசை பெறாமல் இழந்து விடுகின்றனர்.
குழந்தை தொழிலாளர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க நாங்கள் முயற்சிப்போம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் இல்லாத முறையை உருவாக்குவதற்காக பென்சில் என்ற வலை தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வலைதளத்தில் குழந்தைகளை கண்காணிக்கும் திட்டம், புகார் பகுதி, மாநில அரசு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புகள் ஆகிய 5 விசயங்கள் உள்ளன.
-dailythanthi.com