பிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மீது வழக்கு?

farmers1

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியின் வீடு முன்பாக இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்கள் போராட்டத்தின் 74-ஆவது நாளான இன்று ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை பிரதமர் நரேந்திர மோதி இல்லத்தில் மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ஆனால், பிரதமர் இல்ல அதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தில் மனுவை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து விவசாயிகளை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது அய்யாக்கண்ணு உள்ளிட்ட சில விவசாயிகள், திடீரென அங்குள்ள சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது.

farmers2

இதையடுத்து பிரதமர் இல்லத்துக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனால், அவர்களுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரதமர் தங்களை சந்திக்க நேரம் தராமல் அலைகழிப்பதாக அவர்கள் குரல் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகளை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர், அவர்களில் ஒன்பது பேரை நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, பிரகாஷ், தக்ஷ்ணாமூர்த்தி, ஜான் மெல்கிராஜ், லிஸ்டர், பரமசிவம், சிவா, முருகன், சுதாகர் ஆகிய ஒன்பது பேரையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

பிரதமர் வீடு அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு முற்றுகையிட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து மேலதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் இரவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அதன் பின்னர் ஜந்தர் மந்தர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் கூறி தமிழக விவசாயிகள் சிலரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவர்களை டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

விவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வது, நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயகள் சங்கம் சார்பில் கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 23-ஆம் தேதிவரை என மொத்தம் 41 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அவர்களை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். அதன் பிறகு அவர்கள் ஊருக்குத் திரும்பினர்.

அதைதச்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் மீண்டும் டெல்லிக்கு விவசாயிகள் கடந்த ஜூலை 16-ஆம் தேதி வந்தனர்.

அன்றைய தினம் முதல் தொடர்ச்சியாக ஜந்தர் மந்தரில் முகாமிட்டபடி விவசாயிகள் தினமும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள், சாலையில் படுத்து உருளுவது, சாலையில் நாட்டு நடுவது, சங்கிலியால் கை, கால்களை பிணைத்துக் கொண்டு குரல் எழுப்புவது, அரை மொட்டை, முழு மொட்டை, மீசை வழித்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதன் உச்சகட்டமாக மனித மலத்தை திண்பதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு குறைந்தது. இதையடுத்து அவர்களில் ஒரு பிரிவினர், பிரதமர் இல்லத்தை இன்று முற்றுகையிடுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். -BBC_Tamil

TAGS: