இந்தியாவை சிறுமைப்படுத்த பாகிஸ்தானின் போலிப்படத்தை காட்டிய விவகாரம்; ஐ.நா. கூறியது என்ன?

Pakistan-uses-fake-pictureநியூயார்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி உரையாற்றுகையில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது, பயங்கரவாத பூமியாக இருப்பது பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார்.

சுஷ்மா பேச்சுக்கு சபையிலே பாராட்டு முகம் காணப்பட்டது. சுஷ்மா சுவராஜின் பதிலடி உரைக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் மல்லிகா லோகி, இந்தியா தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் தாயகம் என்றார்.

மல்லிகா லோகி பேசுகையில் ‘இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்!’ என புகைப்படம் ஒன்றை ஐ.நா.வில் வெளிக்காட்டினார். ஆனால் புகைப்படத்தில் இடம்பெற்று இருந்த பெண் காஷ்மீரை சேர்ந்தவர் கிடையாது. பெல்லட் துப்பாக்கி சூட்டால் காயப்பட்ட பெண் கிடையாது. காயம் அடைந்த பெண் 17 வயது ராவ்யா அபு ஜோம் ஆவார். காசாவில் 2014-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காயம் அடைந்தவர். இந்த புகைப்படமானது புகைப்பட கலைஞர் லெவினால் எடுக்கப்பட்டது, கார்டியன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்காக  பணியாற்றி வருபவர்.

மல்லிகா லோகி இந்த புகைப்படத்தை காட்டி காஷ்மீரில் நடந்தது என கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஐ.நா.விலும் பாகிஸ்தானின் போலியான புகைப்பட பிரசாரத்தை இந்தியா தோலுரித்து காட்டியது.

பாகிஸ்தான், காசாவில் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இந்தியா மீது பழி சுமத்துவதற்கு பாகிஸ்தான் நடத்திய நாடகம் அம்பலத்துக்கு வந்ததால், போலி படங்களை காட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. தெரிவித்து உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை தலைவர் மைரோஸ்லாவ் லஜ்காக்கிடம், பாகிஸ்தான் போலியான புகைப்படத்தை காட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா? கேள்வி எழுப்பட்டது. அவர் பதிலளித்து பேசுகையில், ‘‘ இதனை எப்படி எதிர்க்கொள்வது என்பது தொடர்பாக நிச்சயம்  கருத்தில் கொள்வோம், அதே நேரத்தில் இது ராஜ்ய ரீதியிலான விவகாரம்’’ என்றார். மேலும் பேசுகையில், ‘‘ இதற்கு நான் பதில் உரைக்க கூடாது. இதில் தொடர்புடைய பிரதிநிதிகள்தான் முடிவு எடுக்க வேண்டும். இதை (இந்த சந்தர்ப்பத்தை) நான் பயன்படுத்த விரும்புகிறேன். ஆனால், நான் ஐ.நா. பொதுச்சபை தலைவர் பதவியை தவறாக பயன்படுத்த மாட்டேன்’’ என்று கூறினார் மைரோஸ்லாவ் லஜ்காக்.

-dailythanthi.com

TAGS: