காலங்காலமாகவே இந்தியாவின் கல்வித்தரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கு தரமான கல்வி எனப்படுவது பாடத்திட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைத்துவிடும் என கண்மூடித்தனமாக நம்பப்படுகிறது. அடிப்படை வசதிகளும், சுகாதாரக் கட்டமைப்புகளும், ஆசிரியர் – மாணவர் எண்ணிக்கை விகிதத்தில் தேக்கமும் உள்ள பள்ளிச்சூழலைப் பற்றி குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை. இந்த சூழல்களில் படித்துதான், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இளமைக்காலத்தை நோக்கி நகர்கின்றனர். இவர்களில் பலர் பாதியிலேயே பள்ளிப்படிப்புகளை விட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்கு தினக்கூலிகளாக வேலைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இந்த நிலையில்தான், இந்திய மாணவர்கள் கல்வி கற்காமலேயே பள்ளிக்கல்வியைக் கடப்பதாக உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
‘உலக மேம்பாட்டு அறிக்கை 2018 : கல்வியின் வாக்குறுதியை உணர்ந்து கற்றல்’ என்ற பெயருடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கைதான் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்கிறது. அதில் இந்தியா மாதிரியான குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகள் கல்வியின் மூலம் மேம்பாடுகளை ஏற்படுத்தாமல் விட்டதோடு, குழந்தைகளுக்கு ஒரு மோசமான அநீதியை இழைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், இந்த நாடுகளில் உள்ள பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுக்காமல் அலட்சியமாக விட்டதால், எதிர்காலத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்திக்கிறார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள 12 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவும் ஒன்று. அதில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தையால், ஒரு சிறிய வாக்கியத்தைக்கூட பிழையில்லாமல் வாசிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இலக்க எண்களைக் கழித்தல் கணக்கு கூட செய்யமுடியாத, குழந்தைகளைக் கொண்ட ஏழு நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடம் வகிப்பதாகவும் உலகவங்கி அந்த அறிக்கையில் தெரிவிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் பின்தங்கிய கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் 46 – 17 போன்ற இரண்டு இலக்க கழித்தல் கணக்கினை செய்ய முடியவில்லை என அது குறிப்பிடுகிறது. மேலும், கல்வியின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, நல்ல வருவாய், சுகாதாரமான, அதேசமயம் வறுமையற்ற தரமான வாழ்க்கையை ஒவ்வொரு குடிமகனும் அமைத்துக்கொள்வதை அனைத்து நாடுகளும் உறுதியளிக்க வேண்டும் எனவும் உலக வங்கி வலியுறுத்துகிறது.
கல்வியானது சமூகத்தில் நிலவும் வறுமையை ஒழித்து, அனைத்து மக்களுக்குமான வாய்ப்புகளையும், வளங்களையும் சமமான முறையில் பகிர்ந்தளிப்பதாக இருக்கவேண்டும். பல ஆண்டுகள் பள்ளிகளில் கல்வி பயின்றும், இந்தக் கல்விமுறை சமூகம் குறித்த ஆழமான சிந்தனைகளை விரிவடையச் செய்யாமல், அடிப்படைக் கல்வியில் இருந்து தூரமாக விலக்கியே வைத்திருக்கிறது. இந்த அரசும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது. பள்ளிக்காலங்களிலேயே எதிர்ப்பாலினம் குறித்த புரிதல்கள், சமூக பிரச்சனைகள், சமத்துவம் போன்ற பல விவாதங்களில் இருந்து மாணவர்களை அந்நியமாக்கிவிடுவதன் மூலம், அவர்களின் இளமைக்காலங்களில் வாழ்க்கை குறித்த அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களால் இந்த சமூகத்தில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகளும் இல்லாமலே போகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து புரட்சிகரமாக எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் பாவ்லோ பயர் கல்வி குறித்து, ‘விடுதலைக்கான கல்வி எனப்படுவது, தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் இல்லை. அறிவாற்றல் மிகுந்த செயல்களாலானது அது!’ என குறிப்பிடுகிறார். இந்தியா மாதிரியான சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒருநாட்டில், கல்வி முற்றிலுமாக வியாபாரமாக்கப்பட்டு இருக்கிறது. தொடக்கக்கல்வியிலேயே கட்டாய தேர்ச்சியை அறிமுகப்படுத்தி, சர்வதேச தொழில் அடிமைகளை உற்பத்தி செய்யும் வேலையிலும் இறங்கியிருக்கிறது இந்த அரசு. இதையெல்லாம் மீறி, கல்வியானது பாரபட்சமற்ற, அனைவருக்குமான கலையாக, அதேசமயத்தில் மேற்கூறிய தரங்களை முன்னிலைப்படுத்துவதாகவும் அமைந்திருந்தால் மட்டுமே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
– ச.ப.மதிவாணன்
-nakkheeran.in