டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் இன்றைய தினம் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் குழுவினர் 76-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மலம் திண்பது, சாலையில் படுத்து உருளுவது, மண் சோறு சாப்பிடுவது, இலை தழைகளை கட்டிக் கொள்வது, செருப்பால் அடித்துக் கொள்வது, தூக்கு கயிற்றில் தொங்குவது என விவசாயிகள் நூதன முறையில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் யாரும் செவி சாய்க்கவில்லை.
இன்றைய தினம் காலை 11 மணியளவில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனார். ஆனால், காலை 10.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபடத் தயாராகிக் கொண்டிருந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அய்யாக்கண்ணு, ஜனநாயக நாட்டில் விவசாயிகளின் குறைகளை களைய வேண்டியது மத்திய அரசு மற்றும் பிரதமரின் கடமை என்றும், கடமையை செய்ய மறுக்கும் பிரதமர் மோதி விவசாயிகளை அடிமைகளாக நடத்துவதாகவும், தீண்டத்தகாதவர்களைப்போல் நடத்துவதாகவும் கூறினார்.
விவசாயிகள் போதுமான விழிப்புணர்வு அடைந்துள்ளதாக கூறும் அய்யாக்கண்ணு, வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் சமயம் அதனை முற்றுகையிட உள்ளோம் என்றும், விவசாயிகளுக்கான நாடாளுமன்றம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றும் கூறினார். -BBC_Tamil