ஸ்ரீநகர், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் மீது இன்று அதிகாலை 4:30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படை சரியான பதிலடியை கொடுத்தது, 3 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற சண்டையில் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். 4 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர், முகாமில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அண்டைய நாடாக இருக்கும் வரையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கும் என காஷ்மீர் ஐஜி முனிர் கான் கூறிஉள்ளார்.
அவர் பேசுகையில், “பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், துரதிஷ்டவசமாக ஒரு ராணுவ அதிகாரியை நாம் இழந்துவிட்டோம். ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல் பின்னணியில் உள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. மீடியாக்கள் செய்திகளை வெளியிடுகையில் நியாயமான முறையில் இருக்கவேண்டும், பாகிஸ்தான் நம்முடைய அண்டைய நாடாக இருக்கும் வரையில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும், சில மீடியாக்கள் இது பின்னடைவு என கூறுவது எனக்கு தெரியாது, பின்னடைவு கிடையாது. தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது,” என கூறிஉள்ளார்.
-dailythanthi.com