ஜீவநதி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் தூத்துக்குடி மக்கள்!

தூத்துக்குடி: மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு, குப்பைகளை கொட்டுதல் உள்பட பல்வேறு வகைகளில் ஆறு மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றை தூய்மைபடுத்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் எதிரொலியாக நெல்லையில் பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை நெல்லை ஆட்சியர் சந்தீப் தந்தூரி முயற்சியால் தாமிரபரணி ஆற்றைத் தூய்மை செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆறு ஓடும் முறப்பநாடு முதல் கடலில் கலக்கும் புன்னைக்காயல் வரை சுமார் 30 கி.மீ தொலைவுக்கு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதற்காக மாணவ, மாணவியர், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பல்வேறு தரப்பினரும் அங்கு திரண்டனர். முதலில் அங்கிருந்த முட்செடிகள் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணியை முதல் கட்டமாக துவங்கியுள்ளோம். இந்த பணிகள் இரண்டாவது கட்டமாக ஆத்தூர் பகுதியில் இருந்து மருதூர் அணை வரை இனி வரும் நாட்களில் தொடர்ந்து நடக்கும். மேலும், விடுமுறை நாட்களில் அனைத்து தரப்பு மக்களின் ஓத்துழைப்புடன் இந்த பணி நடக்கும் என தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: