கேரளா ‘லவ் ஜிகாத்’ என்னுடைய மகள் தற்கொலை வெடிகுண்டாக வேண்டாம் ஹாதியா தந்தை

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை எதிர்த்து அசோகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு  இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் ‘லவ் ஜிகாத்’ சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. “கேரள போலீஸ் இதில் பாரபட்சமாக எடுக்கலாம் என்று கருதப்படுவதால் என்ஐஏ-விடம் விவரங்களைக் கேட்டோம்” என தெரிவிக்கப்பட்டது. விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவிடம் கேரள மாநில போலீஸ் ஒப்படைத்தது. இவ்வழக்கில் புதிய திருப்பமாக அக்டோபர் 3-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி உத்தரவை கேள்விக்குட்படுத்தியது.

ஹாதியா – ஜகான் இடையே நடந்த மத இணைப்பு திருமணத்தை தடை செய்ய கேரள ஐகோர்ட்டு அதிகாரம் இல்லை என்றது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தீபக் மிஸ்ரா. மேலும் பெண்ணை அவரது தந்தை கடந்த பலமாதங்களாக தன் பிடியில் வைத்திருப்பதையும் சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. “சட்டப்பிரிவு 226-ன் படி இந்த திருமணத்தை செல்லாது என்று ஐகோர்ட்டு அறிவிக்க முடியுமா, என்ஐஏ விசாரணை அவசியமா ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து தர்க்கபூர்வ சட்டப்பூர்வ வாதங்களை நாங்கள் கேட்போம்” என்று கூறி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 9-ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார். நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே இவ்வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அவசியமில்லை என்று பினரயி விஜயன் தலைமையிலான கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

ஹாதியாவின் தந்தை அசோகன் பேசுகையில்,  என்னுடைய மகள் தற்கொலை வெடிகுண்டாக வேண்டாம் என பேசிஉள்ளார்.

பல்வேறு ஆர்வலர்கள் எங்களுடைய குடும்பத்திற்கு எதிராக மிகவும் கடுமையான பிரசாரம் மேற்கொள்கிறார்கள், ஆனால் யாரும் எங்களுடைய வலி, தாய் – தந்தையாக எங்களுடைய வேதனையை யாரும் புரிந்துக் கொள்ள முயற்சிப்பது கிடையாது. எந்தஒரு மதத்திற்கும், மதமாற்றத்திற்கும் நான் எதிரானவன் கிடையாது, ஆனால் மிகவும் மோசமான பகுதிகளுக்கு அப்பாவி சிறுமிகளை தள்ளும் தீய பிரசாரங்களுக்கு நான் எதிரானவன். நான் பாசமாக வளர்த்த மகள், ஒரு தற்கொலை வெடிகுண்டு ஆகவேண்டாம். மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய ஜகான் திருமணத்திற்காக மட்டும்தான் இங்கு வந்து உள்ளார், என்னுடைய மகளை திரும்ப அங்கே அழைத்து சென்று மோசமான இடங்களில் தள்ளிவிடலாம்.

நான் மட்டும் நீதிமன்றத்தை நாடவில்லை என்றால் என்னுடைய மகளை அயல்நாட்டிற்கு கொண்டு சென்று இருப்பார்கள். ஒரு தந்தையாக, பெற்ற மகளை யாரும் வன்முறை நிறைந்த ஆப்கானிஸ்தான் அல்லது சிரியாவிற்கோ அனுப்ப மாட்டார்கள். என்னுடைய சிரியாவில் வாழ்க்கை தொடர்பாக பேச தொடங்கியதுமே ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தேன். நான் பெற்ற மகளை விட்டுவிட்டு விதியென்று நான் இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார் அசோகன். கேரளாவில் இருந்து கடந்த வருடம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைய இளைஞர்கள், பெண்கள் 21 பேர் சென்ற விவகாரத்தை தொடர்பு படுத்தி கேள்வியை எழுப்புகிறார் அசோகன்.

கேரளாவில் இருந்து சென்று ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 21 பேரில் 6 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

21 பேர் மாயம் என்னுடைய கண்ணை திறக்க செய்து உள்ளது, இரு வழக்கிலும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதுபற்றி விரிவாக பேச இப்போது விரும்பவில்லை, இதுபோன்ற நிலையானது என் மகளுக்கு நடக்க கூடாது என்று கூறிஉள்ளார் அசோகன்.

-dailythanthi.com

TAGS: