டெங்குவிற்கு கொத்து கொத்தாக மடியும் மக்கள் – பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்களை அழிக்க தீவிரமான நடவடிக்கையை முடுக்கி விட்டு இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 2 தினங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

1150 பேருக்கு டெங்கு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுமார் 12,000 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,150 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

டெங்குவை பரப்பினால் நடவடிக்கை

தமிழகம் முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொசு உருவாகாமல் தடுங்க

நோட்டீஸ் வழங்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அதை செய்ய தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ல் பிரிவு 134(1)-ன் கீழ் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் போலீஸ் மூலம் இந்திய தண்டனை சட்டம் 269-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 பேர் மரணம்

மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. டெங்குவிற்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு 100 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரமற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அச்சத்தில் தமிழக மக்கள்

நேற்று ஒரே நாளில் டெங்குவிற்கு 9 பேர் பலியாகியுள்ளனர். டெங்குவிற்கு கொத்து கொத்தாக மக்கள் பலியாகி வருவதால் அச்சம் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்படாததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: