அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; முதல்–அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, முதல்–அமைச்சரிடம் திருமாவளவன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு பயிற்சி பள்ளிகளில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனத்துக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தலித்துகள் உள்பட அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகராக நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. எனவே இங்கு இனியும் காலம் தாழ்த்தாமல், இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட சில கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபாடு செய்ய முடியாத நிலையை மாற்ற வேண்டும்.

இந்து அறநிலையத்துறைக்கு உள்படாத கோவில்கள் பல உள்ளன. சாதியவாதிகளின் பிடியில் அவை இருப்பதால் தாழ்த்தப்பட்டோர் அங்கு வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படவில்லை. எனவே, அங்கு சமத்துவத்தை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களால் கட்டப்பட்டு வழிபாட்டில் இருக்கும் கோவில்களின் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: