தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்து, தீட்சை பெற்றவர்கள் தங்களையும் தமிழக அரசு இதுபோல பணியில் அமர்த்த வேண்டுமென கோரியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த திருமுருகன், 2006 ஆம் ஆண்டில் ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி படித்துக்கொண்டிருந்தார். அப்போது தமிழக அரசு வெளியிட்ட ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சியில் சேர்வதற்கு விண்ணப்பங்களைக் கோரி இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை செய்திருந்த விளம்பரம் அது. அதற்கு விண்ணப்பித்து, இடம் கிடைத்துவிடவே, அவர் தனது பிஎஸ்சி ஐ.டி படிப்பை விட்டுவிட்டு, இதில் சேர்ந்தார்.

சென்னை பார்த்தசாரதி கோயிலில் இருந்த வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் படித்தார் திருமுருகன்.

இப்போது பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இவரோடு சேர்ந்து தமிழகம் முழுவதும் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த 206 பேரும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு தி.மு.க. அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு தடை வாங்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த ஆண்டே இந்த அர்ச்சகர் பள்ளிகள் மூடப்பட்டன. வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் படித்த முடித்தவர்களுக்கு வேலையும் கொடுக்கப்படவில்லை.

“படித்து முடித்து ஒரு வருடம் வரை ஊரிலேயே சின்னச் சின்ன கோயில்களில் அர்ச்சகராக வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு என் தந்தை இறந்துவிடவே ஒரு வருடம் அர்சசகர் வேலை ஏதும் பார்க்கவில்லை. அதற்குப் பிறகு, அர்ச்சகர் பணியில் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் திருமுருகன்.

அக்கம்பக்கத்தில் நடக்கும் ஹோமம், பூஜை இதற்குச் செல்ல விரும்பினாலும் அதை நடத்தும் பிராமண புரோகிதர்கள் என்னையெல்லாம் ஏற்க மாட்டார்கள். அதனால், இந்த அக்கவுண்ட்ஸ் வேலைக்கு வந்துவிட்டேன் என்கிறார் இவர்.

விழுப்புரம் மாவட்டம் கங்கயனூரைச் சேர்ந்த வெங்கடேசனின் கதையும் இதேபோலத்தான். 12வது வரை படித்த இவர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்துவந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். படித்து முடித்து பணி நியமனம் கிடைக்காத காரணத்தால், தற்போது ஒரு சிறிய கோவிலில் வேலை பார்ப்பதோடு, ஹோமம், கும்பாபிஷேகம் என்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

“ஹோமம், கும்பாபிஷேகம் போன்றவை பெரிய நிகழ்ச்சிகள் என்பதால், நான் நான்கைந்து பிராமண குருக்களையும் உடன் அழைத்துச் செல்வேன். அவர்களும் வருவார்கள்” என்கிறார் வெங்கடேசன்.

தமிழக அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்த 206 பேரில் பலர் வேறு வேலைகளைப் பார்த்து வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். சிலர், சிறிய கோயில்கள், ஹோமங்கள், கும்பாபிஷேகங்கள் என்று படித்த படிப்பை ஒட்டிய பணியை பார்த்துவருகிறார்கள்.

“வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் யாருக்கும் எந்த ஆச்சார அனுஷ்டானங்களும் மறக்கவில்லை. கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் அரசு பிராமணரல்லாதவர்களை உடனடியாக அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும்” என்கிறார் பாலகுரு. இவர் திருச்செந்தூர் சைவ சிவாச்சாரியார் பாடசாலையில் படித்தவர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறைப்படி பயிற்சிபெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் நோக்கில் 2006ல் தி.மு.க. அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார் சங்கம் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், தமிழக கோவில்களில் ஆகமவிதிகளின்படி மட்டுமே கோவிலின் அர்ச்சகர்களை நியமிக்கும் நடைமுறை/மரபு எங்கெல்லாம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதோ அங்கே அந்த நடைமுறையும் மரபும் அப்படியே தொடரலாம் என்று கூறப்பட்டது.

அப்படியான நியமனங்கள் இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படைத் தத்துவத்துக்கு முரணானது அல்ல என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேசமயம் இப்படி ஆகம விதிகளின் கீழ் அல்லாத அர்ச்சகர் நியமனங்களால் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகும்போது அப்படியான அர்ச்சகர் நியமனம் ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகக் கருதப்பட்டு அந்தந்த கோவிலின் அர்ச்சகர் நியமனம் என்பது ஆகமவிதிகளின் கீழ் தான் செய்யப்பட வேண்டுமா அல்லது தமிழக அரசின் சட்டம் கூறும் பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக முடிவு செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பு இந்த விவகாரத்தில் எந்தத் தெளிவையும் ஏற்படுத்தாத நிலையில், பயிற்சி பெற்ற மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

இந்தத் தீர்ப்பு வந்ததற்கு அடுத்த நாள், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர் சங்கத் தலைவரான ரெங்கநாதன், சென்னையில் உள்ள பெரியார் சிலை முன்பாக தனது அர்ச்சகர் தீட்சையைத் துறந்தார். காவியாடை, கழுத்தில் அணிந்திருந்த மாலைகள், பூநூல் ஆகியவற்றையும் கழற்றினார்.

“இந்தப் பயிற்சியினால் எதுவும் மாறாது. ஜாதிதான் வேலையைத் தீர்மானிக்கும் என்ற நிலையில், இந்தத் தீட்சையினால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே அவற்றை கழற்றியெறிந்தேன். இப்போது கிராஃபிக் டிசைனராக ஒரு பத்திரிகையில் பணியாற்றி வருகிறேன்” என்கிறார் ரெங்கநாதன்.

தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்கள் அனைத்திலும் உள்ள 1,174 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமையின்படி அர்ச்சகர் பதவியைப் பெற்றவர்கள். மேலும், 411 பேர் அவர்களின் சிபாரிசு மூலம் உள்ளே வந்தவர்கள் என்கிறார் இந்த விவகாரத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர் ராஜு.

பல கோவில்களின் உள்ளேயே வேதாகமப் பள்ளிக்கூடங்களை நடத்தி அதில் படித்தவர்களை நியமனம் செய்கிறார்கள். இந்தப் பள்ளிகளுக்கு எந்த சட்ட அங்கீகரமும் கிடையாது என்கிறார் அவர்.

தமிழக அரசு 2006 ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் அரசாணையை வெளியிட்ட பிறகு, மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ கோவில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் சென்னை, திருச்சியில் வைணவக் கோவில்களுக்கான பயிற்சி நிலையங்களையும் துவக்கியது. இதற்கென ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இங்கு படித்து முடித்த 206 பேருக்கு மடாதிபதிகளை வைத்து தீட்சைகளும் வழங்கப்பட்டன.

“2015 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, தமிழக அரசு உடனடியாக இந்த மாணவர்களைப் பணி நியமனம் செய்திருக்க வேண்டும். அப்போது யாராவது வழக்குத் தொடர்ந்திருந்தால், அதனை எதிர்கொண்டு சரியான முறையில் வாதாடியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இது எதையுமே செய்யவில்லை” என்கிறார் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்.

கேரளாவில் 36 பிராமணரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அர்ச்சகர் பணி வாய்ப்பு, தமிழ்நாட்டிலும் இது தொடர்பான விவாதங்களை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு இதுவரை இது தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. -BBC_Tamil

TAGS: