சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற சபரி மலை அய்யப்பன் கோவிலில் நுழைய 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரள இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில்நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

முன்னதாக நீதிபதிகள் கோவில் விதிமுறைகள் தொடர்பாக சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, 10 முதல் 50 வரை வரையிலான பெண்களை கோவிலால் விலக்கி வைக்கும் நடைமுறையை அனுமதிக்கலாமா?

பெண்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதற்கு உடல் ரீதியிலான காரணிகள் போதுமானதா?

கோவிலில் பெண்கள் நுழைய கட்டுப்பாடுகளை விதிப்பது அரசியலமைப்பின் கீழ் அவர்களின் உரிமைகளை மீறுவது இல்லையா?

பெண்கள் மீதான தடையை நடைமுறைப்படுத்துவது, மத சுதந்திரத்திற்கான அவர்களின் உரிமையை மீறுவதாக இல்லையா?

விதிகள் 3 (பி)யின்படி கேரள இந்து மத வழிபாட்டு முறை விதிகள் பெண்களை தடை செய்வதற்கான மதக் குழுக்களை அனுமதிக்கிறதா, அப்படியானால் அது விதி 14 ஐ மீறுவதில்லையா?

1991ஆம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை நீடிக்கும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிய நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அதே விஷயத்தில், விசாரணை தேவையா?

tamil.oneindia.com

TAGS: