சென்னை புறநகர் பகுதியில் பஞ்சலோகத்தால் ஆன 600 ஆண்டுகள் பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சிலை கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு வெள்ளை நிற கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த உத்தரமேரூரின் ஒழுகரை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (25), தட்சிணாமூர்த்தி (29), சேகர் (28), மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மகேந்திரன் (41) ஆகியோர் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஆரியப்பெருங்குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்தில் இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவ்விகாரம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 52 செ.மீ உயரம், 17 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் ஆன 600 ஆண்டுகள் பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சிலையை உத்தரமேரூரில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-nakkheeran.in

























