திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும், தாய்லாந்து கோவில் போல இதையும் செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தேவசம்போர்டு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.
மேலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில் பாகுபாடு கூடாது. அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, தேவைப்பட்டால் இதற்கு ஆதரவான கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியிருந்தார்.
புனித்தன்மை சோதனை
இந்நிலையில் ஏற்கனவே பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிப்பது குறித்து சர்ச்சை கருத்தை கூறி இருந்தார் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன். பெண்கள் தீட்டுபடாமல் இருக்கிறார்களா என்பதை கருவி வைத்தா பரிசோதிக்க முடியும் என்று பேசி இருந்தார்.
சர்ச்சை பேச்சு
இந்த முறையும் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சபரிமலைக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலுக்கென்று தனி மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரச்னைகள் எழும்
பெண்களை நெரிசல் காலத்தில் கோவிலுக்குள் அனுமதித்தால் அது பல பிரச்னைகளை எழுப்பும். அவர்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. விரும்பத்தகாத செயல்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பெண்களே செல்ல மாட்டார்கள்
சபரிமலைக் கோவிலை நாங்கள் தாய்லாந்தில் உள்ள செக்ஸ் டூரிசம் கோவில்கள் போல மாற்ற விரும்பவில்லை. நீதிமன்றமே அனுமதித்தாலும் சுயமரியாதை உடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் தைரியமாக செல்ல விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை என்றும் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
தேவசம்போர்டு தலைவரின் இந்த கருத்திற்கு அமைச்சர் சுரேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். எப்படி இந்த மாதிரியான முட்டாள்தனமான ஒப்பீட்டை அவரால் செய்ய முடிகிறது. பெண்களையும், கோவிலையும் அவர் சிறுமைப்படுத்திவிட்டார். இந்த கருத்திற்கு நிச்சயம் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.