12 வகுப்பு தேர்வில் 95 சதவிதம் மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா மருத்துவராக ஐதராபாத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.
மருத்துவராகி சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சி வகுப்பிற்கு சென்ற சம்யுக்தா கடந்த திங்கள் கிழமை தற்கொலை செய்து கொண்டார். தனக்கு வழங்கப்படும் பாடங்களை எதிர்க்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்து உள்ளார்.
புதியதாக உருவாகி உள்ள தெலுங்கு மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மட்டும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது. இவ்வழக்குகளை கையில் எடுத்து உள்ள குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர்கள் பொரும்பாலான மாணவர்கள் அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற முடிவை எடுத்து உள்ளனர் என கண்டுள்ளனர். தன்னுடைய மகள் மருத்துவர் ஆகவேண்டும் என்று கூறியதும் பெரிதும் மகிழ்ச்சியடைந்த சம்யுக்தாவின் தந்தை (டிரைவராக பணியாற்றி வருகிறார்) பயிற்சி மையத்தில் சேர்த்து உள்ளார். தன்னுடைய மகள் 12-ம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்கள் பெற்றாலும் அவரால் பயிற்சி மையத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையை விளக்கி உள்ளார் அவர்.
“இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர்த்தால் உங்களுடைய குழந்தைகளும் இதுபோன்ற முடிவையே தேர்வு செய்வார்கள் என்று மற்ற பெற்றோர்களுக்கு நான் அறிவுரையாக வழங்குகின்றேன்,” என பேசி உள்ளார் சம்யுக்தாவின் தந்தை.
ஆந்திராவில் கல்லூரியில் மாணவர் ஒருவரை ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளநிலையில் மகள் இறந்த துக்கத்தில் தன்னுடைய நிலையை விவரித்து உள்ளார் சம்யுக்தாவின் தந்தை. கல்லூரியில் மாணவர்கள் நடத்தப்படும் விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசும் அறிந்து கொண்டது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முதல் நடவடிக்கையை தொடங்கினார், மாநிலத்தில் உள்ள உயர் கல்லூரிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். மாணவர்களை 8 மணி நேரங்களுக்கு மேல் கல்லூரிகளில் கட்டாயமாக வகுப்பறையில் இருக்க பணிக்க கூடாது, ஆசிரியர்கள் அவர்களை வார்த்தையாலும், உடல் ரீதியாகவும் தாக்க கூடாது.
குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர் அஜிதா ராவ் பேசுகையில், “இதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவேண்டும். கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பைதான் வழங்கவேண்டும், அவர்கள் மனரீதியாவும், உடல் ரீதியாகவும் தாக்க கூடாது. இப்போது சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே மூடப்பட்டு உள்ளது, அவர்கள் விரைவில் எழுவார்கள்,” என கூறிஉள்ளார். கடந்த மாதம் 17 வயது மாணவர் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டதால் 5 வது மாடியில் இருந்து குதித்தார். மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாணவர் பின்னர் பேசுகையில், “நான் எதற்கும் சரிபட்டு வரமாட்டேன் எனவும் தெருவில் சுற்றுவதற்கு மட்டுமே தகுதியானவன் என்றும் ஆசிரியர்கள் திட்டியதாக,” கூறினார். மாணவர்கள் தற்கொலையில் கமர்ஷியல் கல்வி நிறுவனங்களை வல்லுநர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
உளவியல் நிபுணர் வீரபத்ர கந்த்லா பேசுகையில், பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகள் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தை குழந்தைகள் மத்தியில் திணிக்கிறார்கள், இதற்காக எவ்வளவு வேண்டும் என்றாலும் பணம் செலவு செய்கிறார்கள் என வேதனையை பகிர்ந்து உள்ளார். “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நாம் குற்றம் சாட்டுவது எளிதானது? பெற்றோர்கள் என்ன செய்வது? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து வரும் மாணவர்கள் நுழைவு தேர்வில் சாதனைப் படைப்பது வழக்கமானது. இருப்பினும் வல்லூநர்கள் இதுபோன்ற பாராட்டக்கூடிய செயல்பாடு பிறருக்கு அழுத்தம் தருவதாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். 2016-17 கல்வி ஆண்டில் மட்டும் இரு மாநிலங்களை சேர்ந்த 6,744 மாணவர்கள் இடங்களை தட்டி சென்றனர்.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது, அதன்படியே மாணவ சேர்க்கையும் நடைபெற்றது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கோரியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பிளஸ்-2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று இருந்தபோதிலும், நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறாததால் ஏராளமான மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவைச் சேர்ந்த மாணவி அனிதா ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியும் சாதகமான பதில் கிடைக்காத நிலையில், தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் செப்டம்பரில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இருப்பினும் நீட் தேர்வு அடிப்படையிலே மருத்துவ மாணவ சேர்க்கை நடைபெற்றது.
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு என்றவுடன் கடந்த ஆண்டைவிடவும் புதிது, புதியதாக பயிற்சி மையங்கள் திறக்கப்படுகிறது, லட்சக்கணக்கில் பணம் செலுவு செய்து மாணவர்கள் சேரும் நிலையும் காணப்படுகிறது. இந்நிலையை சமூக மற்றும் கல்வி ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மாணவர்கள் தற்கொலை தொடர்பான செய்திகள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-athirvu.com