நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் தான் டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு சைதை துரைசாமி பேட்டி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2012-ம் ஆண்டில் நான் மேயராக இருந்தபோது, டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று அவர்கள் கூறினார்கள். இதையடுத்து, சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தியபோது, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் தான் தீர்வு என்று அவர்கள் கூறினார்கள்.

சராசரியாக மனிதனுக்கு 1½ லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கவேண்டும். தட்டணுக்கள் குறையும்போது தான் உயிரிழப்பு நேரிடுகிறது. உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் அடையாளமாக சிவப்பு புள்ளிகள் வருவதுதான், இதனுடைய இறுதிக்கட்ட அறிகுறி.

டெங்கு காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டால், ரத்த தட்டணுக்களை கவனித்து பப்பாளி இலைச்சாறு மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுத்தால் காப்பாற்றிவிடலாம். ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை செலவு இல்லாமல் பப்பாளி இலைச்சாறு அதிகரிக்கிறது. இதன்மூலம் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணம் தவிர்க்கப்படுகிறது.

இந்த மருந்துகளை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிண்டியில் உள்ள ‘கிங்’ பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொடுத்த சான்றிதழுடன், நானும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கவனத்துக்கு எடுத்துச்சென்றோம்.

இதையடுத்து நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கு வதற்கு ஜெயலலிதா 21-11-12 அன்று அரசாணை பிறப்பித்தார். மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவை இலவசமாக வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவாக இருந்தபோது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176. ஆனால் சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்த பின்னர் அந்த எண்ணிக்கை 931 ஆக குறைந்திருக்கிறது.

2012-ம் ஆண்டில் இந்த மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553. மருந்துகள் கொடுத்த பின்னர் அடுத்த 3 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 378 ஆக குறைந்திருக்கிறது. 2015-ம் ஆண்டு பெருமழை வெள்ளம் வந்த சமயத்தில் 12 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 18 லட்சம் பேருக்கு அவை வழங்கப்பட்டன.

சித்த மருத்துவத்தில் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்குரிய நோய் தடுப்பு சக்தி இருக்கிறது என்பதை நான் அனுபவரீதியாக பார்த்தவன்.

அரசு ஆணை பிறப்பித்ததும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு ஆகியவை கொடுக்கப்பட்டன. இது குறித்து அச்சப்பட வேண்டியதும் இல்லை, பக்க விளைவுகளும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-dailythanthi.com

TAGS: