மும்பை: பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுவதும், 10 லட்சம் பேர், தங்குவதற்கு வீடின்றி, பிளாட்பாரங்களில் வசிப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதை விட, மூன்று மடங்கு அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசிப்பதாக, தனியார் சமூக அமைப்புகள் கூறியுள்ளன. மழை மற்றும் குளிர் காலங்களில், தங்குவதற்கு இடமின்றி சிரமப்படுவதுடன், நுாற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
கடந்த, 2010ல், பிளாட்பாரங்களில் வசிப்போருக்கு, ஒரு லட்சம் மக்கள் தொகை உடைய, 62 நகரங்களில், இரவு தங்குமிடங்களை அமைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பழைய, பயன்படுத்தாத ரயில் பெட்டிகளில், மின் இணைப்பு, கழிப்பறை போன்ற வசதிகளை செய்து, தேவைப்படும் இடங்களில் நிறுவ, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கு, 10 ரயில் பெட்டிகளை வழங்க, தெலுங்கானா அரசு முன்வந்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில், ரயில் பெட்டிகளை நிறுத்துவதற்கான இடங்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-athirvu.com