சென்னை : அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி அளிக்க முன்வந்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ் இருக்கை அமையப்போவது உறுதியாகி இருக்கிறது.
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட வேண்டும் எனும் தமிழ்த்தேசிய இன மக்களின் நீண்டநெடு நாள் கனவிற்குச் செயலாக்கம் கொடுத்து மருத்துவர் ஜானகி ராமன் அவர்களும், மருத்துவர் திருஞானசம்பந்தம் அவர்களும் அரும்பாடாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பை தமிழக அரசு நழுவவிட்டுவிடக்கூடாது என்கிற என்னுடைய கோரிக்கையில் வலியுறுத்தி இருந்தேன். இந்த சமயத்தில் அதற்கு வலுசேர்க்கும் விதமாய்த் தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியினைத் தருகிறது. தமிழக அரசின் இவ்வறிவிப்பினை பெருமிதத்தோடு வரவேற்கிறேன்.
தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் நாம் தமிழர் கட்சியின் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.