திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலைகள்: புதைந்து கிடக்கும் உண்மைகளும், பின்னணியும்

திருநெல்வேலியில் கந்துவட்டி பிரச்சனைக்கு இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை மீதான கவனத்தை திருப்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட உதவி எண் சேவைக்கு தமிழகம் முழுவதும் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உதவி எண் அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த எண்ணை பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனையின் தீவிரம் குறித்து, பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணன், களத்தில் இருந்து வழங்கிய தகவல்கள்:

தீக்குளித்து இறந்த இசக்கிமுத்து ஆறு முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாமல் போனதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தம்பி கோபி ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

கோபியின் குற்றச்சாட்டை மறுத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஒவ்வொரு முறை விசாரணைக்கு அழைத்தபோதும் இசக்கிமுத்து ஊரில் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்ததால் மட்டுமே விசாரணை நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இசக்கிமுத்து குடும்பத்தின் தற்கொலைக்குப் பிறகு, கந்துவட்டி பிரச்சனை பற்றி புகார் கொடுத்தவர்கள் பேசமுன்வந்துள்ளனர்.

புகார் கொடுப்பதில் சிக்கல்

திருநெல்வேலியில் பாவூர் சத்திரம், காசிதர்மம், பாளையங்கோட்டை போன்ற இடங்களில் நாம் சந்தித்த புகார்தாரர்கள் பலரும் காவல் நிலையங்களில் கந்துவட்டி அல்லது மைக்ரோ ஃபைனான்ஸ் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்த சமயத்தில் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரைக்குளத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித் தொழிலாளி ஆறுமுகம் புகார் கொடுக்க காவல் நிலையத்தை நாடியபோது நேர்ந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

”கந்துவட்டி புகார் கொடுத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை. முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர் மாரியப்பன் என்னை திட்டி அவமானப்படுத்தினர். வட்டிகொடுக்க முடியாத போது, புகார் எப்படி கொடுப்பாய் என கெட்டவார்த்தைகள் பேசி, என் குடும்பத்தையும் சொல்லமுடியாத வார்த்தைகளால் திட்டினார்கள்,” என்றார் ஆறுமுகம்.

அவர் மேலும் ”காவல்துறை அதிகாரிகள் கந்துவட்டி கொடுத்தவருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் இறுதியில், உள்ளூர் காவல் நிலையத்திற்குதான் வரவேண்டும் என முன்னீர்பள்ளம் காவல்நிலைய அதிகாரிகள் கூறிவிட்டார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை,” என்றார் ஆறுமுகம்.

ஆறுமுகத்தின் குற்றச்சாட்டுகளை பற்றி முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் மாரியப்பனிடம் கருத்துகேட்டபோது விசாரணை முறையாக நடைபெற்றது என்று கூறினார். ”ஆறுமுகம் கடனை திருப்பிதருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவரை நாங்கள் திட்டவில்லை. ஆறுமுகம் மற்றும் அவர் குற்றம்சாட்டிய நபர் என இரண்டு தரப்பினரிடமும், வட்டிவசூல்பற்றி காவல்நிலையத்தில் பேசக்கூடாது என்று கூறினேன். இரண்டு தரப்பினருக்கும் சாதகம் இல்லாமல் விசாரணை செய்தோம்,” என்றார் மாரியப்பன்.

கந்துவட்டி வாங்கும் பெண்களின் நிலை

காவல்நிலையத்தில் அதிக வட்டி வசூலிப்பது தொடர்பாக புகார் கொடுக்கும் பெண்களின் நிலை மிகவும் மோசம் என்கிறார்கள் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக் குழுவினர்.

”காவல்நிலையத்தில் புகார் கொடுக்கசென்றபோது எங்களை ஒருமையில் பேசினார்கள். நெடுநேரம் நிற்கவைத்துத் திட்டினார்கள். பெண்களாக இருந்து வட்டியைக் கட்டமுடியவில்லையா, வாங்கத் தெரியும் போது கொடுக்க தெரியலையா என்பதை மோசமான வார்த்தைகளில் பேசினார்கள்,” என்று சுப்புலட்சுமி மற்றும் புஸ்பலதா தெரிவித்தனர்.

சுப்புலட்சுமி மற்றும் புஸ்பலதா கூறிய குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒளிப்பதிவை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாரிடம் காண்பித்தபோது வருத்தம் தெரிவித்தார்.

”காவல்நிலைய அதிகாரிகள் பொது மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களாக இருக்கவேண்டும். இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் புகார் கொடுக்க வரும்போது அவர்களை கண்ணியமாக நடத்தவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறேன்,” என உறுதியளித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2003ல் இருந்து 2017 வரை கந்துவட்டி தொடர்பாக 246 வழக்குகள் நடந்து வருவதாகவும், மேலும் புதிதாக பதிவாகும் குற்றவழக்குகளில் பணம் சார்ந்த பிரச்சனைகளை கூர்ந்து கவனிக்கவுள்ளதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கந்துவட்டி கொடுமை வழக்குகளில் தண்டனைக் காலம் உயர்த்தப்படவேண்டும் என்கிறார் தருமபுரி மாவட்டம் ஹரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவருமான டில்லிபாபு.

”பாலக்கோடு பகுதியில் கடந்த 2014ல் வட்டி செலுத்த முடியாத பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற நபர் விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வெறும் நான்கு ஆண்டு தண்டனை என்பது ஏற்புடையதாக இல்லை. கந்துவட்டி தொழில் செய்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாத நிலை தொடர்கிறது,” என்று தெரிவித்தார் டில்லிபாபு.

கந்துவட்டி பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர 2003ல் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அதை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது என்றும் புகார் கொடுக்க மக்கள் முன்வரவேண்டும் என்றும் டில்லிபாபு கூறுகிறார்.

வங்கிகளை ஏன் தேர்வு செய்வதில்லை?

கந்துவட்டிக்காரர்களிடம் அதிக வட்டி செலுத்தவேண்டும் என்ற நிர்பந்தம், தவறினால் மிகவும் மோசமாக நடத்தப்படும் நிலை. இருந்தாலும் கந்துவட்டி தொழில் நடத்துபவர்களை ஏன் மக்கள் நாடுகிறார்கள் என பொருளாதார நிபுணர் சீனிவாசனிடம் கேட்டபோது தேவைக்கு உடனடியாக பணம் கிடைப்பது ஒரு முக்கிய காரணம் என்றார்.

”வங்கிகளைக் காட்டிலும் கேட்டவுடன் பணம் தருகிறவர்களாக கந்துவட்டிக்காரர்கள் இருக்கிறார்கள். வங்கியில் கடன் பெற சொத்து ஆவணங்கள் தேவை, சாட்சியாக ஒரு நபரை கொண்டுவரவேண்டும் என பல உத்தரவாதங்கள் தேவை. குறைந்தபட்ச பணம் இல்லாதவர்களுக்கு கடன் தருகிறவர்களாக கந்துவட்டிக்காரர்கள் இருப்பதால், அதிக வட்டி செலுத்தவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்,” என்றார் சீனிவாசன்.

கந்துவட்டித் தொழில் செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத் தொழிலாக கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள சந்துருவிடம் (பெயர் மற்றப்பட்டுள்ளது) பேசியபோது விதவிதமான வகையில் வட்டி வசூல் நடைபெறுவதை அறியமுடிந்தது.

சுமார் அறுநூறு நபர்களுக்கு கந்துவட்டி கொடுத்துவருவதாக கூறிய சந்துரு தனது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வணிகர்கள் என்றார். ரேஸ்கிளப்பில் விளையாடுவதற்கும் பணம் வாங்குகிறார்கள் என்றும் கூறினார்.

”ராக்கெட் வட்டி, குதிரை வட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, வாரம் மற்றும் மாத வட்டி என்ற பெயரில் வட்டி வசூலிக்கின்றோம். சாதாரணமாக காய்கறிக் கடை, பழக்கடை நடத்துபவர்கள் காலையில் ரூ.ஒரு லட்சம் பெற்றால், இரவு திருப்பிக்கொடுக்கும் போது ரூ.1,05,000 திருப்பித்தருவார்கள். ரேஸ்கிளப் போன்ற இடங்களில் மீட்டர் வட்டியில் கடன்பெறுபவர்களுக்கு, பணத்தைப் பெற்ற சமயத்தில் இருந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வட்டி அதிகரிக்கும். ஒரு லட்சம் வாங்கியவர் ஒரு மணிநேரம் கழித்து பணத்தை திருப்பிச்செலுத்தும்போது ரூ.3,௦௦௦ வட்டியாக செலுத்தவேண்டும்,” என்றார் சந்துரு.

குதிரைவட்டி பெறுபவர்கள் பெரு வணிகர்களாக இருப்பார்கள் என்று கூறிய சந்துரு, ”தொழில் போட்டி காரணாமாக உடனடியாக தனது நிறுவனத்தின் முதலீட்டை அதிகரித்து, உடனடி லாபத்தை பெருக்க பெரிய தொழில்அதிபார்கள் குதிரைவட்டியில் கடன் வாங்குவார்கள். அதில் சுமார் ஒரு லட்சம் பெற்றால், வட்டியாக ஒரு நாளுக்கு ரூ.30,000 செலுத்தவேண்டும்,”என்றார் சந்துரு. -BBC_Tamil

TAGS: