இந்தியா முதலில் இந்துக்களுக்கான நாடுதான்: சிவசேனா சர்ச்சை கருத்து

மும்பை, இந்தியா முதலில் இந்துக்களுக்கான நாடுதான் எனவும், மற்றவர்கள் எல்லாம் பிறகுதான் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மேலும், மத்தியில்  இந்துத்துவாவுக்கு ஆதரவான அரசாங்கம் இருக்கின்ற நிலையிலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினை, கார் வாப்சி (தாய்மதம் திரும்புதல்) ஆகிய பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படமால் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்துக்களுக்கான நாடு எனவும், இவ்வாறு கூறுவதால், பிற மதத்தினருக்கு சொந்தமில்லை என்று அர்த்தம் ஆகாது எனவும் தெரிவித்து இருந்தார். மோகன் பகவத்தின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிவசேனா மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ இந்தியா, இந்துக்களை போலவே பிற மதத்தினருக்கும் சொந்தமானது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் சொல்லி இருக்கிறார். ஆனால், முதலில் இந்தியா இந்துக்களுக்குதான். பிற மதத்தினருக்கு என்பதெல்லாம் பிறகுதான் என்று சிவசேனா தலைவர் சொல்லி இருக்கிறார். ஏனெனில், கிட்டதட்ட 50 நாடுகள் முஸ்லீம்களுக்காக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கிறிஸ்தவர்களுக்கான நாடுகளாக உள்ளது. புத்த மதத்தினருக்கு சீனா, ஜப்பான், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவை தவிர இந்துக்களுக்கு வேறு நாடுகள் இல்லை.

இன்று இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கம் அதிகாரத்தில் உள்ளது. ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்த அரசாங்கம் முன்வரவில்லை. நீதிமன்றத்தின் கைகளில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை அரசு விட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்ற போதிலும், வந்தேமாதரம் பாடுவதில் பிடிவாத மனப்பான்மை  இன்னும் சிலருக்கு உள்ளது. இன்னும், சிலர் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று உரிய மரியாதை கூட செலுத்துவதில்லை. தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்காமல் அவர்கள் இருக்கும் பொழுது, அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கத்திற்கு வழிகாட்ட வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com

TAGS: