நன்னிலம்: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளுக்கான பணியை மேற்கொண்டதை எதிர்த்து நன்னிலம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதனால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து பொதுமக்கள் சமீபகாலமாக போராடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அமைதியாக இருந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் தற்போது மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்து இருக்கிறது.
தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து அடுத்தகட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கான் வேலைகளை ஆரம்பித்துள்ளது அந்த நிறுவனம். இதனால் நேற்று அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளைச் சந்தித்து பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ‘கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்னைகளை அடுத்து எங்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இங்கு இருக்கும் இயற்கை வளங்களை அழிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.இன்று காலை நன்னிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நன்னிலம் கிராமத்தில் எண்ணெய் வயலுக்கு செல்லும் வழியை மறித்து சாலை மறியல் செய்தனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை.
இதனையடுத்து, அதிகாரிகள் வந்து பேச வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். என்ன நடந்தாலும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பணிகளை நடக்கவிடுவதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
அவ்வட்டார மக்களின் ஒப்புதல் இன்றி எந்த செயலும் துவங்க அனுமதிக்கக்கூடாது .ஒன்றுபடவேண்டும்.தடுக்க வேண்டும் .