61வது ஆண்டில் தமிழகம்!

சென்னை : தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 61வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது. இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று சட்டம் இயற்றப்பட்டு மொழி வாரியாக இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.

மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும் கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவா என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொண்டாட்டம் இல்லை

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப்பகுதிகள் அளிக்கப்பட்டதால் பொதுவாகவே இந்த தினம் குறித்து தமிழகத்தில் கண்டு கொள்ளப்படுவதில்லை. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டாலும் மெட்ராஸ் ஸ்டேட் என்றுதான் பெயயர் இருந்தது.

மாநிலத்தில் வளர்ச்சி உள்ளதா?

பின்னர் 1976ல் பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தான் தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. மொழி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்ட பிறகு தான் மாநில வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது என்பது அரசியல் கட்சியினரின் கருத்து. எனினும் அந்த அளவிற்கான வளர்ச்சியை மொழி வாரி மாநிலங்கள் பெறாமல் போனதற்கு மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து மத்திய அரசால் நெருக்குதலுக்கு ஆளாவதும் காரணம் என்கின்றனர்.

எதிர்வாதங்கள்

ஒருவேளை மொழி வாரியாக தமிழகம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு அண்டை மாநிலங்களுடன் சந்திக்கும் நீர் பிரச்னைகள் இருந்திருக்காது என்ற விவாதங்களும் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் தமிழ் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதாகவும் எதிர்வாதங்கள் வைக்கப்படுகின்றன.

ஓயாமல் இருக்கும் தனி மாநில கோரிக்கை

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் உத்ராகாண்ட், தெலங்கானா என பிராந்திய அடிப்படையிலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போதும் இந்தியாவில் தனி மாநில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு தான் வருகின்றன.

ராமதாஸ் வாழ்த்து

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களும் கூட இன்றைய நாளில் ஒரு நினைவூட்டலைக் கூட அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. எனினும் பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகம் வளம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் : மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருவான நாள் இன்று. விரைவில் தமிழகத்தின் முதல்வராக ஒரு தமிழன் வர வேண்டும். தமிழகம் வளம் பெற வேண்டும்.

-tamil.oneindia.com

TAGS: