சென்னை: சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது. நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது. திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.
வீடுகளுக்குள் தண்ணீர்
வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளம் – மின்சாரம் துண்டிப்பு
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
போக்குவரத்து முடங்கியதால் அவதி
வாடகைக் கார், ஆட்டோ என எதுவும் கிடைக்காததால் மக்கள் செய்வறியாமல் தவித்தள்ளனர். ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது.
துரைசாமி சப்வே
இதேபோல் கனமழையால் சென்னை சைதாப்பேட்டையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துரைசாமி சப்வே நிரம்பியதால் மூடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முடங்கியது
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையின் போதும், கடந்த ஆண்டு வர்தா புயலலின் போதும் மயிலாப்பூர் தப்பித்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் வெள்ளம் மயிலாப்பூரை ஸ்தம்பிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.