சென்னை: மழை நீர் வெளியேற வழியில்லாமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார்.
வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையம் தங்களது போக்குவரத்து வசதிக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளது. இதனால் மழையோ, பெருவெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் அந்த நீர் கொசஸ்தலை ஆற்றில் செல்ல வழியில்லாமல் கழிமுகத் துவார பகுதிகளுக்கு அருகே தேங்கி நிற்கிறது.
மூழ்கும் அபாயம்
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டுவதால் நீர் செல்ல வழியின்றி வடசென்னை மூழ்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நடிகர் கமல்ஹாசனும் இதுகுறித்த எச்சரிக்கை விடுத்ததுடன் அந்த பகுதிகளை நேரில் சென்றும் பார்வையிட்டார்.
ஆட்சியர் உறுதி
இதையடுத்து ஆக்கிரமிப்புகள் இருப்பது ஊர்ஜிதமானால் அவை அகற்றப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 6 நாள்களாக பெய்த மழையால் வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆட்சியர் ஆய்வு
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே போடப்பட்ட சாலையை அகற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தமிழ் ஒன் இந்தியா தளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
பணிகள் நடைபெறுகின்றன
அந்த பணிகளை செயல்படுத்துவதற்காக களத்துக்கு சென்று ஆய்வு செய்தேன். தற்போது சாலை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். இதையடுத்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ஆட்சியர் உத்தரவுபடி சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
நாள்கள் பிடிக்கும்
இந்த பணிகள் முடிவடைய இன்னும் ஓரிரு நாள்கள் ஆகும். இந்த பணிகளுக்கு பிறகு வெள்ள நீர் அப்பகுதிகளில் தேங்காது. மேலும் மலை போல் குவிந்துள்ள சாம்பல் கழிவுகளை அகற்ற போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார் அவர்.