தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது நேரும் வெள்ளபாதிப்புகளை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நவம்பர் 1-ஆம் தேதியன்று வடசென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் தண்ணீர் தேங்கிய இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி வந்ததும், உண்மை நிலவரம் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்மாறாக அமைந்துவிட்டது என விமர்சனங்கள் எழுந்தன.
”சிறுமிகளின் மரணத்தால் கவனத்துக்கு வந்த கொடுங்கையூர்”
கடும் அதிருப்தியில் உள்ள கொடுங்கையூர்வாசிகள் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளபாதிப்பு அதிகரித்துவருவதாகவும், ஆட்சியாளர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாக கூறும் செய்கைகளால் பலனில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர்.
”இந்த ஆண்டு இரண்டு சிறுமிகள் இறந்துவிட்ட சம்பவத்தால் பல அதிகாரிகள், அமைச்சர்கள் இங்கு வந்தார்கள். சென்னை நகரத்தின் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தப்படும் கொடுங்கையூரில் வெள்ளம் வருவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த குழந்தைகளின் மரணங்களை தவிர்த்திருக்கலாம்,” என்கிறார் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்.
படகில் பயணம் செய்யும் நிலை வரும்
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு பகுதியை ஒரு தொழிற்பேட்டையாக மாற்றப்போவதாகவும், நீர்நிலைகளைத் தூய்மை செய்து படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யபோவதாகவும் இடைத்தேர்தலின் போது அதிமுகவினர் வாக்குறுதி அளித்ததை நினைவுகூர்ந்தார் மற்றொரு பகுதிவாசி செண்பகம்.
”தொடர்மழை பெய்தால் இந்த ஆண்டே நாங்கள் படகில்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. எங்கள் வீட்டிற்குள் பாம்பு வந்தது. தெரு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாக்கடை நீரும் கலந்துவருவதால் டெங்கு காய்ச்சல் வந்துவிடும் என்ற பயமும் உள்ளது,” என்கிறார் செண்பகம்.
கொடுங்கையூரில் இருந்து வடசென்னையின் முதல் மண்டலமான திருவொற்றியூருக்கு சென்றோம்.
ஆண்டாண்டு காலமாக தொடரும் பாதிப்பு
திருவொற்றியூரில் உள்ள மாணிக்கம்நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இருசக்கரவானங்களை பயன்படுத்தமுடியாமல், மக்கள் தண்ணீரில் நடந்தும், வண்டிகளை தள்ளிவந்ததையும் பார்க்கமுடிந்தது.
”பல ஆண்டுகளாக இதேநிலைதான் தொடர்கிறது. வெயில் காலங்களில் முறையாக தண்ணீர் தேங்கும் இடங்களை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில்தான் தண்ணீர் தேங்குகிறது என்று தெரிந்தும் இதைசரிப்படுத்தும் எண்ணம் இல்லை இவர்களுக்கு என்பதுதான் உண்மை,” என்கிறார் திருவொற்றியூரைச் சேர்ந்த பூ வியாபாரி பார்வதி.
வெள்ளநீர் வடிகால் பாதைகளில் அடைப்பு
சென்னை மாநகராட்சியில் வெள்ளபாதிப்பை ஆய்வு செய்ய சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி நந்தகுமார் திருவொற்றியூர் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் உதவியுடன் ரயில்வே குளத்தில் நிரப்பிவருவதாக கூறினார். ”சுரங்கப்பாதையில் உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்றுகிறோம். வடிகால் நீர் செல்வதற்கு வழி இல்லாமல் இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது,” என்றார்.
திருவொற்றியூரில் நிவாரண முகாம் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர் தற்போது எழுபது நபர்கள் அங்கு உள்ளதாக தெரிவித்தார்.
வீணாகும் வடசென்னையின் கட்டமைப்பு
சென்னை நகரம் உருவான வரலாறு, கட்டமைப்பு பற்றி சென்னப்பட்டினம் என்ற நூலை எழுதிய எழுத்தாளர் ராம்சந்த்ர வைத்தியநாத் (66) வில்லிவாக்கம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார்.
ஓட்டேரி ஏரியில் சிறுவயதில் குளித்த அனுபவம் உள்ளதாகக் கூறும் இவர் வெள்ளபாதிப்பு பெருமளவு இல்லாத நகரமாக பழைய சென்னை இருந்ததற்கு காரணம் இங்கு இருந்த வெள்ளநீர் வடிகால் வசதி என்கிறார்.
”2015ல் வந்த வெள்ளத்தில் தென்சென்னை மூழ்கியது. ஆனால் வடசென்னையில் பாதிப்பு அவ்வளவாக உணரப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வடசென்னைக்கு கவனம் செலுத்துவதற்குப் பதிலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தொய்வுநிலை தொடர்ந்ததால் இந்த ஆண்டு வெள்ளபாதிப்பை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.” என்றார்.
அவர் மேலும் பல இடங்களிலும் வெள்ளநீர் வடிகால்களை சாக்கடையாக பயன்படுத்திவருவதுதான் சென்னை நகரத்தில் வெள்ளபாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்றார்.
”வடசென்னையில் பக்கிங்காம் கால்வாய், ஐசிஎப் பகுதியில் இருந்து ஓட்டேரி வரை உள்ள வெள்ளநீர் வடிகால் பாதைகள் சாக்கடையாக மாறிவிட்டன. இதன்காரணாமாகவே வெள்ளநீர் சாலையில் தேங்குகிறது,” என்றார் ராம்சந்த்ர வைத்தியநாத்.
இதனைத் தொடர்ந்து நாம் வியாசர்பாடியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்றோம். அங்குஅடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் குடிசைப்பகுதிகளில் மின்சாரம் இரண்டு நாட்களாக தடைப்பட்டு, சிலமணிநேரம் மட்டும் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
சென்னையின் பெருமையை மட்டும் பேசினால் போதுமா?
வியாசர்பாடியில் வசிக்கும் கல்யாணசுந்தரம் 1956ல் இருந்து சத்யாமூர்த்தி நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும்நிலை நீடிப்பதாகக் கூறினார்.
”சென்னை டே (சென்னை தினம்) என பல இடங்களில் சென்னை நகரத்தின் பெருமையை ஆண்டுக்கு ஒருமுறை பேசுகிறார்கள். சென்னையின் முக்கிய அடையாளமான வடசென்னை பகுதிகளில் அடிப்படை வடிகால் வசதியை சரிப்படுத்தாமல் என்ன பெருமையை பேசுவது,” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வடசென்னை மூழ்கும் அபாயம்
அடுத்த ஆண்டு தொடர்மழையில் வடசென்னை மூழ்கும் நிலைக்கு அரசே வழிவகுத்துக் கொண்டுவருகிறது என்கிறார் காட்டுப்பாக்கம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான சீனிவாசன்.
கொசஸ்தலை ஆற்றின் கழிமுகமாக விளங்கும் எண்ணூரில் தமிழகஅரசின் மின்வாரியம் அமைத்துள்ள சாலை வெள்ளபாதிப்பை ஏற்படுத்தும் என்றுகூறி சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
”கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுகத்தில் தமிழக அரசின் மின்வாரியம் ஆக்கிரமித்துள்ளதாக மத்தியசுற்றுச்சுழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இனியாவது ஆக்கிரமிப்பை அரசாங்கம் அகற்றவேண்டும். இது தொடர்ந்தால் வடசென்னையும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. இங்குள்ள கழிமுகத்தில் ஆக்கிரமிப்பு செய்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்குவதை தவிர்க்கமுடியாது,” என்று சீனிவாசன் கூறினார்.
தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்
வெள்ளநீர் வடிகால்களை சரிசெய்யும் பணி தொடங்கியுள்ளதாக கூறும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ”ஒரு சில இடங்களில் மட்டுமே வெள்ளநீர் வடிகால் பாதையின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சாக்கடையாக மாறியுள்ளது. இந்த ஆண்டு அவற்றை அடையாளம் கண்டு சரிபடுத்திவிடுவோம்,”என்றார்.
மேலும், சென்னையின் பதினைந்து மண்டலங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு அமர்த்தியுள்ளதால் உடனுக்குடன் பாதிப்புகளை சரிப்படுத்தும் முயற்சிகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதோடு வெள்ளநிவாரண முகாம்கள் மட்டுமின்றி நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பதில்
வடசென்னையின் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நிதிஅமைச்சருமான ஜெயக்குமாரிடம் வடசென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளில் திருப்தியில்லை என மக்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றிக் கேட்டோம்.
”கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகளின் மரணம் அடைந்தது கவனக்குறைவால் ஏற்பட்டது. உடனடியாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இது இந்த ஆண்டு நாம் கற்ற பாடமாக ஆகிவிட்டது என்பதில் வருத்தம்தான். ஆனால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்குவதை கட்டுப்படுத்த முடிந்தது. தண்ணீர் வெளியாகாத இடங்களில் மோட்டார் உதவியுடன் நீரை அகற்றிவருகிறோம்,” என்றார்.
வெள்ளநீர் வடிகால் பாதைகள் சாக்கடையாக மாறிப்போனது பற்றி கேட்டபோது, ”சில இடங்களில் சாக்கடை நீர் வெள்ள நீருடன் கலந்து அந்த பாதையில் செல்லும்போது பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பை ஏற்படுத்துகின்றன. சென்னை நகரத்தில் 142 இடங்கள் தாழ்வான பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு விரைவாக வெள்ளத் தடுப்பு பணிகளை செய்துவருகிறோம்,” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
கடந்த நான்கு நாட்களில் சென்னை நகரத்தில், பாதிப்பு ஏற்படும் என்று எண்ணப்படும் இடங்களில், 120 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 12 முகாம்களில், 1145 பேர் தங்கியுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதிகாரிகள் ஆய்வு செய்வதுடன், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் வந்து ஆய்வு நடத்தியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். -BBC_Tamil