‘அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்’ நிர்மலா சீதாராமன் அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார்.

நேற்று அவர் இந்தியா–சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்றார். அஞ்சா மாவட்டம் கபிது என்ற இடத்தில் இந்த நிலைகள் உள்ளன. அங்குள்ள வீரர்களுடன் உரையாடிய அவர், வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டினார். மேலும், அங்குள்ள நிலவரத்தையும், ராணுவத்தின் தயார்நிலையையும் கேட்டறிந்தார். அவருடன் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி அபய் கிருஷ்ணாவும் சென்று இருந்தார். பின்னர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கும் நிர்மலா சீதாராமன் சென்றார்.

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்திற்கு தலைவர்கள் செல்லும் போது சீனா எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமனின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. நிர்மலா சீதாராமனின் பயணம் பிரச்சனைக்குரிய பகுதியில் அமைதிக்கு பிரச்சனையை ஏற்படுத்தும், எல்லையில் அமைதியை பராமரிக்க இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சீனா கூறி உள்ளது.

சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங் பேசுகையில், “சீனாவின் நிலைபாடு குறித்து நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். சீனா-இந்தியா எல்லையில் கிழக்கு செக்டாரில் பிரச்சனை உள்ளது. பிரச்சனைக்குரிய இப்பகுதிக்கு இந்திய தரப்பில் இருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தப்பட்ட பிராந்திய அமைதிக்கு உகந்தது கிடையாது.” எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவும், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் இந்தியா, சீன தரப்புடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என கூறி உள்ளார்.

பாகிஸ்தானைப் போல் மற்றொரு அண்டை நாடான சீனாவும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா அநியாயமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டு (எல்ஏசி) பகுதியை கொண்டு உள்ளது, எல்லைப் பிரச்சனையை தீர்க்க 19 முறை பேச்சுவார்த்தை இருதரப்பு இடையேயும் நடைபெற்று உள்ளது.

-dailythanthi.com

TAGS: