டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்த தலைமுறை பெருமிதத்தோடு பார்க்கும் என்று நிதியமைச்சர் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் ஒரே இரவில் 15 லட்சம் கோடி பணம் செல்லாதவை ஆகிப்போனது.
இந்த நடவடிக்கை கருப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை எடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று மோடி குறிப்பிட்டார்.
இதனால் மக்களுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டாலும், இதன் மூலம் மிகப்பெரிய நன்மை ஏற்பட இருப்பதால் மக்கள் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி என்று ஆளும் பா.ஜ.க சொன்னாலும், புள்ளிவிபரங்கள் தோல்வி என்றே குறிப்பிடப்படுகின்றன. வருகிற நவம்பர் 8ம் தேதியை எதிர்கட்சிகள் கருப்பு நாளாக கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
அதே நேரத்தில், பா.ஜ.க.,வும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு வெற்றி விழாவாக இதைக் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் அருண் ஜெட்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் வெற்றி குறித்து பேசி உள்ளார். இந்த நடவடிக்கையால் கருப்புப்பண சந்தை முற்றிலும் ஒடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், மீண்டும் இந்தியப் பொருளாதாரம் தலை நிமிர்ந்து இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பலன்கள் மக்களுக்கு சாதாரணமாகத் தெரியாது; தொலைநோக்குப் பார்வையில் பொருளாதாரத்தை மோடி உயர்த்தி இருக்கிறார். இதை வரும் தலைமுறையினர் பெருமிதமாகச் சொல்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் கருப்புப்பண மாற்றத்திற்கு உதவியாக இருந்த 2.24 லட்சம் போலி கம்பெனிகளின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கருப்புப்பணம் சந்தையில் உலாவுவது குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.