சிறிய அறிவிப்பு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறியாத சாமானியர்கள்

‘சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்’ என்ற ரேஞ்சுக்கு பல பில்ட்டப்புகளைக் கொடுத்து பிரதமர் மோடியால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சிகளில் தோன்றி, நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என அறிவித்தார்.

ஒரு சிறிய அறிவிப்பு மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என்பதை அறியாத சாமானியர்கள், உழைத்த களைப்பில் உறங்கச் சென்றுவிட்டனர். அன்று உறங்கியவர்கள் அதற்குப் பின் உறங்குவதையே மறந்துவிடும் அளவுக்கு நாட்டின் நிலைமையை புரட்டிப் போட்டது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை. அது நடைமுறைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதுகுறித்த ஒரு சிறிய ப்ளாஷ்பேக்..

*பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் இரவு முழுக்க நகைக்கடைகள் திறந்துகிடந்தன. பணமாக இருந்தால்தானே செல்லாது.. நாங்கள் நகைகளை வாங்கிக் குவிப்போம் என்று நகைக்கடைகளில் அலைமோதியது கூட்டம்.

*செல்லாமல் போன பணத்தை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளின் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தனர். பல வங்கிகளின் ஜன்னல்களின் வழியாக கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கைமாறின.

*பணத்தின் மதிப்பு நீக்கப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மோடி. அதேசமயம், ரூ.2,000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. டிஜிட்டலா, பணமா – எதை உபயோகிப்பது என்பது புரியாமல் ஒரு பகுதி மக்கள் கூட்டமும், கையில் இருக்கும் பணத்தை மாற்றமுடியாமல் என்ன செய்வது என்பதே புரியாமல் ஒருபகுதி மக்கள் கூட்டமும் தெருத்தெருவாக சுற்றி அலைந்தது.

*புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வைப்பது மாதிரியான ஏ.டி.எம். இயந்திரங்கள் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் வங்கிகளையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான வங்கி ஊழியர்கள் விடுமுறை இன்றி, கூடுதல் நேரம் உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

*மருத்துவமனை, திருமண நிகழ்ச்சிகள் என உடனடித் தேவைகளுக்கு போதுமான பணம் கிடைக்காமல் பலர் திண்டாடினர். தன் மகனின் சிகிச்சைக்காக பணம் வேண்டி காத்திருந்த பெண், கிடைக்காமல் ஏமாந்துபோன விரக்தியில் கதறி அழுத புகைப்படங்கள் வைரலாகின.

*ஒருவர் வாரம் ஒருமுறை ரூ.40,000தான் மாற்றமுடியும் என்று உச்ச வரம்பு அறிவித்தது அரசு. அதற்குப் பின்னும் முறைகேடுகள் தொடர, வங்கியில் பணம் மாற்றுபவர்களின் கைகளில் கறுப்பு மை வைத்து அனுப்பும் கொடுமையும் நடந்தது.

*ஏ.டி.எம்.களில் நாளொன்றுக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்கமுடியும் என்ற அறிவிப்பு வெளியிட்ட பின், என்ன செய்வதென்பதே தெரியாமல் குழம்பிப்போனது பொதுஜனம். பல ஏ.டி.எம். இயந்திரங்களின் வாசல்களில் வரிசையாகக் காத்துக் கிடந்தவர்கள், நேரம் அதிகமானதால் செருப்புகளை வைத்து இடம் பிடித்துவைத்த சம்பவங்களும் நடந்தேறின.

*மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வெறுத்துப்போன பொதுமக்கள் பலர் விமர்சனங்களை முன்வைத்தபோது, பாகிஸ்தான் எல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா? என பாஜகவினர்  காட்டமாக பேசினர். அதேசமயம், பாகிஸ்தான் எல்லையில் கஷ்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வங்கியில் பணம் மாற்ற முடியாமல் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவமே அவர்களுக்கு மௌனமான பதிலாக அமைந்தது.

*பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் சுமார் 200 பேர் இறந்தனர். மருத்துவமனைகளில் பணம் இல்லாமல், திருமணம் நடத்த பணமில்லாமல் மாரடைப்பு என உயிரிழந்தோர் இந்த கணக்கில் சேரமாட்டார்கள்.

*அன்றுவரை வாய்திறக்க மாட்டார், ஊமை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தில் கொந்தளித்துப் பேசினார். நாட்டின் மொத்த உற்பத்தியில் 2% வீழ்ச்சியடையும் என கணக்குப் போட்டுக் காட்டினார். மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையை திட்டமிட்ட சூறையாடல், சட்டத்தின் பேரிலான கொள்ளை என அவர் காட்டமாகப் பேசி அமர்ந்தபோது, கைகட்டி அமைதியாக அமர்ந்திருந்தார் பிரதமர் மோடி.

*ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த பிரச்சனை தலைவிரித்தாட, தமிழகத்தின் சென்னையில் வார்தா புயல் தன்பங்கிற்கு ஆட்டம் காட்டியது. ஏற்கெனவே துயரத்தில் தவித்திருந்த சென்னைவாசிகள், கடும் துயரநிலைக்கு தள்ளப்பட்டனர்.

*பணமதிப்பு இழப்பு நடவடிக்கை கொண்டுவருவதற்காகவே, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனை ராஜினாமா செய்யும் வகையில் அவமானப்படுத்தினார்கள். சமீபத்தில் தனது பதவி விலகலுக்கான காரணம் குறித்துப் பேசிய அவர், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் தோல்வியை நாட்டு மக்களுக்கு விளக்கினார்.

*இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, 50 நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வரும்.. இல்லையேல், என்னை தீயிட்டு கொளுத்துங்கள் என அறிவித்தார் பிரதமர் மோடி. ஐம்பது நாட்கள் கடந்து புதிய வருடமும் பிறந்தது. பழைய இந்தியாவிற்கு பவுடர் போட்டு, புதிய இந்தியா பிறந்தது எனப்பேசிய மோடி, கறுப்புப் பணத்திற்கெதிரான சர்ஜிக்கல் ஸ்டிரைக் இதுவென கர்ஜித்தார்.

*பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அதை சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சித்தனர். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சீத்தாராம் யெச்சூரி என பலரும் இந்த நடவடிக்கையை ஒரு பொருளாதார சீரழிவு, சூதாட்டம், திட்டமிட்ட மோசடி என நேரடியாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

*மோடியின் இந்த அறிவிப்பை, அடுத்த கட்சிக்காரர்கள் மட்டுமல்லாது சொந்தக் கட்சிக்காரர்களே சமீபகாலமாக சாடி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா இதை முட்டாள்தனமான நடவடிக்கை என பேசியது, பெரும்பாலான பாஜகவினரின் வாய்களையே அடைத்தது.

*முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதுபோலவே நாட்டின் மொத்த உற்பத்தி 2% வீழ்ச்சி அடைந்தது. உலகின் முக்கிய பொருளாதார பல்கலைக் கழகங்கள், பொருளாதார இதழ்கள் என இந்த நடவடிக்கையை விமர்சித்தபோது, உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் பாராட்டித் தள்ளின.

*பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் எதிரொலியாய் இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாம் பணப்பரிவர்த்தனையற்ற டிஜிட்டல் கிராமங்களாக குஜராத்தில் அகோதரா மற்றும் மும்பையில் தசாய் ஆகியவை உருப்பெற்றன. ஓராண்டு நிறைவுற்றிருக்கும் இந்த வேளையில், அவை நொந்த கதையை உலகமே செய்திகளாக்கிக் கொண்டிருக்கின்றன.

*பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமாக அறிவித்துள்ளன. அவை அறிவித்த சில மணிநேரத்தில் பாஜக சார்பில் நவம்பர் 8ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசியல் சாரா மக்கள் தங்கள் அன்றாடங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

*நாட்டின் பொருளாதாரமும், பணப்புழக்கமும் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பல சில்லரை வியாபாரிகள் தொழில்துறையை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

*மக்களை டிஜிட்டலுக்கு மாறச்சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்திய அரசு, புதுப்புது வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்கிறது.

ஒப்பற்ற போராட்டங்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவை, வண்ண ஒப்பனைகள் இட்டு புதிய இந்தியா என்று அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உண்மையில் புதிய இந்தியா எல்லோருக்குமான வளர்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும்.

  • ச.ப.மதிவாணன்

nakkheeran.in

TAGS: