ஜி.எஸ்.டி வரி குறைப்பு: மத்திய அரசு பின் வாங்குகிறதா? தவறைத் திருத்திக் கொள்கிறதா?

வரும் நவம்பர் 15 முதல் 200க்கும் அதிகமான பொருட்களின் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என்று வெள்ளியன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 23-வது கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவற்றில் 178 பொருட்கள் ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி விகிதமான 28%த்தில் இருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே வரி’ எனும் நோக்கில் எதிர்க்கட்சிகள் மற்றும் வரி வருவாய் குறையும் என்று கருதிய பல மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இந்த வரியால் பல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில ஆடம்பரப் பொருட்களுக்கு குறைவாகவும். சில அத்தியாவசயாப் பொருட்களுக்கு அதிகமாகவும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

அவ்வப்போது சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தும், வரிவிலக்களித்தும் வந்த மத்திய அரசு இப்போது பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது மக்களின் சுமையைக் குறைக்க எடுக்கப்பட்ட முடிவா அல்லது எதிர்க்கட்சிகளின் நெருக்குதலை சமாளிக்க எடுக்கப்பட்ட முடிவா என்று வாதம்-விவாதம் பகுதியில் பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்களின் பதிலில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

அருளப்பா எனும் பிபிசி நேயர் இவ்வாறு கூறுகிறார், “தகுந்த திட்டமிடாமல் ஜி.எஸ்.டி வரிகளை அதிகம் விதித்து, சிறு தொழில் முனைவோருக்கு கேடுகளை விளைவித்து விட்டார்கள். மக்களுக்கும் நிதிசுமை ஏற்றி விட்டார்கள். தவறை உணர்ந்து வரிகளை குறைத்து இருப்பதை வரவேற்கலாம். ஆனால், அரசுக்கு மக்கள் நலனை விட தேர்தல் நலன்தான் முக்கியம் எனத் தெரிகிறது. ஏனெனில், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை பலதரப்பினரும் சுட்டிக் காட்டியபோது, அப்போதே அதைப் பரிசீலணை செய்யவில்லையே!!”

“குஜராத்தில் தேர்தல்,அவர்களது ஓட்டை வாங்க, கூடுதலாக அங்கு ஜவுளி ஆலைகள் அதிகம் அதனால் 18 % இப்போது 5%ஆக குறைத்தது இந்த காரியத்திற்குத்தான்… இதே தமிழ்நாட்டில் தேர்தலாயிருந்தால் மக்களை நினைத்துக்கூடப் பார்க்காது மத்திய அரசு…சோலியன் குடுமி சும்மா ஆடுமா,” என்று கேள்வி எழுப்புகிறார் சாம் சின்கிளேர் எனும் பெயரில் பதிவிடும் நேயர்.

பின்வாங்கி விட்டதா மத்திய அரசு?

தமிழ் மணி ஒரே நாடு ஒரே வரி என்று கூறுவது ஒரே மதம் என்று ஆவதற்கு அடிப்படையாய் வைத்தே செய்தார்கள். ஆனால் பின்னர் நடைபெற்ற அரசியல் சறுக்கல்களால் பின் வாங்கி விட்டனர்.

“ஓர் ஆட்சியின் முக்கிய நோக்கம் மக்கள் குறைகளை தீர்ப்பதே. எதிர்கட்சிகள் ஏதையும் எதிர்துக்கொண்டுதான் இருக்கும்,” என்று கூறுகிறார் மஹா நடராசா எனும் ஃபேஸ்புக் பதிவர்.

புதியவன் அசோக் குஜராத் தேர்தல். இவுங்களே ஏத்துவாங்க அப்புறம் இவுங்களே குறைப்பாங்க நாடகம்.

-BBC_Tamil

TAGS: