இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் பகுதியில் கிருஷ்ணா நதியில் சுற்றுலாப் பயணிகள் 38 பேர் தனியாருக்குச் சொந்தமான படகில் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் தத்தளித்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள், 15 பேரை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீச்சல் தெரியாத பலர் இந்த சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 18 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியிலும், அந்த பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய அனைவரும் ஓங்கோல் வாக்கர்ஸ் கிளப் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த 8 குடும்பத்தினர் ஒன்றாக அந்த படகை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதில், 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது பயணிகள் யாரும் உயிர் காக்கும் கவசம் அணியவில்லை என்று தெரியவந்துள்ளது. விதிமுறைகளை மீறி உயிர்காக்கும் கவசம் இல்லாமல் பயணிகளை படகில் ஏற்றப்பட்டுள்ளனர்.

மேலும், சிலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

-athirvu.com

TAGS: