ராமேஸ்வரம் : மீனவர்களாகப் பிறந்ததைவிட வேறு என்ன தவறு செய்தார்கள். அண்டை நாடு தான் சுட்டு வாழ்வாதாரத்தை அழிக்கிறது என்றால் இந்திய கடலோரக் காவல் படையும் அதையே செய்வது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் என்று மாதத்தில் குறைந்தபட்சம் 5 செய்திகளையாவது நாம் கடந்து வந்து கொண்டு தான் இருக்கிறோம். மற்றவர்களுக்கு அது வெறும் செய்தியாக இருந்தாலும் கடலை நம்பியே வாழும் மீனவர்களுக்கு அது தான் வாழ்வாதாரம். கச்சத்தீவு பக்கம் வராதீர்கள் என்று இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது. இதே போன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற குரல்களும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்று காரணம் சொன்னது இலங்கைக் கடற்படை. ஆமாம் ஆமாம் என்பது போல மத்திய, மாநில அரசுகளும் தமிழக மீனவர்களையேத் தான் குறை சொல்லி வந்தனர். உயிருக்கே அச்சுறுத்தல் இருக்கும் போது எத்தனை முறை ஒரு மீனவன் எல்லை தாண்டி போய் மீன்பிடித்து தானே மாட்டிக் கொள்ள விரும்புவான்.
அடாவடி செய்யும் இலங்கை
அதிலும் மூர்க்கத்தனமான இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை அடித்து தாக்குவது, கற்களை வீசித் தாக்குவது, வலைகளை அறுப்பது என்று அவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே இல்லை. இவர்களைக் கண்டிக்கவும் ஆள் இல்லை, ஏனெனில் அந்த நாட்டு அரசே அப்படித் தான் அடாவடித்தனமாக பதில் அளிக்கும். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அப்படித் தான் தாக்குதல் நடக்கும் என்று துணிச்சலாக சொல்கின்றனர்.
மார் தட்டிக் கொள்ளும் அரசுகள்
ஆனால் இலங்கை மீனவர்கள் கடல்தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து முறைப்படி சிறையில் தான் அடைக்கிறது இந்திய கடற்படை. தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும் அவர்களுக்கு அதிநவீன படகுகள் மீன்பிடி தொழிலுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் ராமேஸ்வரத்தில் கலாம் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய, மாநில அரசுகள் மார் தட்டிக் கொண்டன.
இந்திய கடற்படை மறுப்பு
அவையெல்லாம் எந்த அளவிற்கு என்று நேற்று மதியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தி இருப்பது அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் பாக் ஜலசந்தியில் எந்த மீனவர் மீதும் இந்திய கடற்படை தாக்குதல் நடத்தவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தியது குறித்து மட்டுமே கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மீது வழக்கு
மேலும் இந்திய கடற்படைகப்பலில் ரப்பர் குண்டுகளே பயன்படுத்தப்படுவதில்லை. பிரச்னையை திசைதிருப்புவதற்காகவே மீனவர்கள் தவறான தகவல்களை கூறுவதாகவும் இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் தாக்கப்பட்டு கைகளில் ரப்பர் குண்டடிபட்டு காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் பிச்சை ஆரோக்கியதாஸ் புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் இந்திய கடற்படை கப்பல் 77 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன தவறு செய்தோம்?
இதுவரை மீன்வளப்பிரச்னையை காரணம் காட்டி இலங்கைக் கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி வந்தனர். ஆனால் தற்போதே இந்தியக் கடற்படையும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது அந்தப் பகுதிமீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடலை நம்பியே பிழைக்கு தங்களுக்கு இந்த அரசுகள் செய்யும் பாதுகாப்பு இது தானா? மீனவர்களாகப் பிறந்ததைவிட நாங்கள் வேறு என்ன தவறு செய்தோம் என்று அவர்கள் கேட்கும் கேள்விகள் எப்போது இந்த அரசுகளின் செவிக்கு போய் சேரும்.