செம்மரம் வெட்ட ஆந்திராவுக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம்.. தமிழர்களுக்கு ஆந்திர போலீஸ் மிரட்டல்

திருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தினால் அதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அம்மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தராவ் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழர்களை கூலிக்கு அமர்த்தும் கொள்ளை கும்பல் தலைவன்களை இதுவரை ஆந்திரா அரசு பிடித்ததே இல்லை.

இதற்கு மாறாக மரம் வெட்டிய கூலித் தொழிலாளர்கள் என கூறி 20 தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்தது ஆந்திரா அரசு. தற்போதும் கொத்து கொத்தாக ஆந்திராவில் பணிபுரியும் தமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி சிறையில் அடைத்து வருகிறது ஆந்திரா அரசு.

அண்மையில் தமிழர்களை ஒரு மினிலாரியில் விலங்குகளைப் போல அடைத்து வந்து காவல்நிலையத்தில் வைத்து கொடூர சித்திரவதை செய்தனர். ஆனால் தமிழக அரசு இந்த அட்டூழியத்தை இதுவரை தட்டிக் கேட்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி காந்தராவ் மிரட்டல் விடுத்திருக்கிறார். ராமேஸ்வரம் மீனவர்களை ராமேஸ்வரம் கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்ச்சியில் இருந்து தமிழகம் இன்னமும் மீளவில்லை.

தற்போது ஆந்திராவின் இந்த மிரட்டலானது மீண்டும் தமிழர்களை நரவேட்டையாட திட்டமிட்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

tamil.oneindia.com

TAGS: