கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு.. நாகப்பட்டினம் உதவி கலெக்டர் அதிரடி

நாகப்பட்டிணம்: செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக இருந்த நான்கு பேரை நாகப்பட்டிணம் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர்.

நாகப்பட்டிணம் அருகே அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அந்த கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதேபோல முனியப்பம்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இந்த செங்கல் சூளைகளில் மயிலாடுதுறை தாலுகா திருமேனி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ், இவருடைய மனைவி ராஜேஸ்வரி, தங்கராஜின் உறவினர்கள் அய்யப்பன், இவருடைய மனைவி சுகன்யா ஆகியோர் செங்கல் சூளை இருக்கும் இடத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் தங்கராஜ், அய்யப்பன் ஆகியோர் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் குடும்ப செலவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனர். வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாததால் அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர்.

இந்தநிலையில் தங்கராஜ், வேலை பார்த்த செங்கல் சூளையில் இருந்து தப்பி சென்று கோபிசெட்டி பாளையம் உதவி கலெக்டரிடம் புகார் செய்தார். அதன்பேரில் உதவி கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் அவர்களை மீட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு ஒப்படைத்தனர். மயிலாடுதுறை உதவி கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இளங்கோ, தாசில்தார் காந்திமதி ஆகியோர் மீட்கப்பட்ட 4 பேரையும் மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

tamil.oneindia.com

TAGS: