உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர் கடற்படை: பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர்களின் கடற்படை என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாட்டின் கடற்படை தினம் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கடற்படையின் வலிமை குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நமது நாட்டின் கடற்படை வலிமைக்கு முன்னுதாரணமாக திகழ்வது சோழர்கள்தான். உலகின் மிகச் சிறந்ததாக திகழ்ந்தது சோழர் கடற்படை.

பெண்கள் பங்களிப்பு

சோழர்களின் கடற்படை அதன் உச்சகட்ட வெற்றிகளை பெற்றது. சோழர் கடற்படைதான் உலகிலேயே பெண்களின் போர் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தியது.

கடற்படையில் பெண்கள்

பெரும்பாலான கடற்படைகள் பெண்களை பிற்காலத்தில்தான் சேர்த்து கொண்டனர். ஆனால் சோழர் கடற்படையில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இன்றைக்கு 900 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் கடற்படையில் பெண்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தனர்.

மராத்திய கடற்படை

நாம் கடற்படை வலிமையைப் பற்றி பேசுகிறபோது சத்திரபதி சிவாஜியின் கடற்படையை புறக்கணித்துவிட முடியாது. கொங்கண் கடற்பரப்பில் சிவாஜியின் மராத்திய கடற்படை முக்கிய பங்காற்றியது. மராத்திய கடற்படையானது மிகப் பெரிய கப்பல்களையும் சிறிய படகுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

விடுதலைக்கு பின்

மராத்திய கடற்படையை புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்ற கனோஜி ஆங்கரேவின் மகத்தான வீரத்தை நாம் எப்படித்தான் மறக்க முடியும்? நாடு விடுதலை அடைந்த பின்னர் நமது கடற்படை பல்வேறு தருணங்களில் வலிமையைக் காட்டியிருக்கிறது. கோவா விடுதலைப் போர், இந்திய-பாகிஸ்தான் போர் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

வாழ்த்துகள்

டிசம்பர் 4-ந் தேதி கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். கடற்படையோடு இணைந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

tamil.oneindia.com

TAGS: