ஸ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் பரூக் அப்துல்லா சவால், பா.ஜனதா பதிலடி

ஸ்ரீநகர்,

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றொரு முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிஉள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றுவது குறித்து பேசுவதற்கு முன்னதாக ஸ்ரீநகரின் இதயப்பகுதியில் அமைந்து உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் என சவால் விடுத்து உள்ளார்.

“அவர்கள் (மத்திய அரசு மற்றும் பாரதீய ஜனதா) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றுவது குறித்து பேசுகிறார்கள். அவர்களை நான் கேட்கிறேன் முதலில் அவர்கள் தேசியக்கொடியை ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் ஏற்றட்டும். அவர்களால் இங்கேயே தேசியக்கொடியை ஏற்றமுடியாது, அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுகிறார்கள்,” என முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா பேசிஉள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பரூக் அப்துல்லா பேசிவரும் கருத்துக்கள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இப்போது மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளதற்கு பாரதீய ஜனதா பதிலடியை கொடுத்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான நிர்மல் சிங் பேசுகையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை வலுப்படுத்துகிறார் என கூறிஉள்ளார். லால் சவுக் உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது என கூறிஉள்ளார். பரூக் அப்துல்லா சமீபத்தில் பேசுகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறாது என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: